Published : 02 Jan 2022 05:38 AM
Last Updated : 02 Jan 2022 05:38 AM
கடலோரப் பகுதிகளில் எதிர்பாராதவிதமாக அதிகனமழை மழை பெய்வது அதிகரித்துள்ள நிலையில், அதுகுறித்து முன்கூட்டியே அறிய, வளிமண்டல அடுக்குகளில் ஏற்படும் மாற்றங்களை ‘ட்ரோன்’ தொழில்நுட்பம் மூலம் அறிய திட்டமிட்டிருப்பதாக மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலர் எம்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சி திட்டங்களுக்காக வனங்கள், நீர்நிலைகள் அழிப்பு, தொழில் வளர்ச்சி, வாகனப் பெருக்கத்தால் அதிகரிக்கும் காற்று மாசு, நகர்ப்புற கான்கிரீட் திட்டங்கள் போன்றவற்றால் பருவநிலை மாற்றம் அடைந்துள்ளது. வழக்கமாக ஜனவரி மாதத்தில் சென்னையில் சராசரியாக 3.6 செமீ மழை கிடைக்கும். ஆனால் கடந்த ஆண்டுவழக்கத்துக்கு மாறாக ஜனவரியில் 19.6 செமீ மழை (வழக்கத்தை விட 437 சதவீதம் அதிகம்) பெய்தது.
அதேபோல், 2019-ம் ஆண்டு வழக்கத்துக்கு மாறாக, மே மாதத்தில் ஃபானி புயல் தாக்கியது. அதேஆண்டு டிசம்பரில் தாக்கிய ஒக்கி புயலின் நகர்வை வானிலை ஆய்வுமையத்தால் கணிக்கவே இயலவில்லை. 2018-ம் ஆண்டு டெல்டா மாவட்டங்களைத் தாக்கிய கஜா புயல், வழக்கத்துக்கு மாறாக வலுகுறையாமல், பல்வேறு மாவட்டங்களை துவம்சம் செய்துகொண்டே அரபிக் கடலில் இறங்கியது.
இதேபோன்று செயற்கைக்கோள் புகைப்படங்கள், உலக வானிலை மைய தரவுகள், நிலப்பரப்பு ஈரப்பதம், வெப்பம், மழை கண்காணிப்பு மற்றும் வளிமண்டல அடுக்குகளில் உள்ள காற்றின் வேகம், வீசும் திசை, அதன் அழுத்தம், ஈரப்பதம் மற்றும் ரேடார் தகவல்கள், கடல் பரப்பில் ஏற்படும் மாற்றம் போன்றவை அடிப்படையில் உருவாக்கப்படும் வானிலை மாடல்களும் அண்மைக் காலமாக வானிலை மாற்றத்தை சரியாக கணிக்கத் தவறுகிறது.
இதன் தொடர்ச்சியாக கடந்த நவ.16-ம் தேதி நள்ளிரவு பெய்த அதிகனமழை, டிச.30-ம் தேதி பெய்த அதிகனமழையை வானிலை ஆய்வு மையத்தால் கணிக்க முடியவில்லை. இதுபோன்று பல நேரங்களில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டப் பகுதிகளில் அதிகனமழை பெய்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளால் அரசு இயந்திரங்களும், பொதுமக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவதில்லை. கடந்த 30-ம் தேதி பிற்பகல் முதல் பெய்த கனமழையால் அன்று மாலை சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து முடங்கியது.
இதற்கிடையே, சென்னை மற்றும் அந்தமானில் மட்டுமே வளிமண்டல கண்காணிப்பு நடைபெறுகிறது. இடைப்பட்ட பகுதியில் கண்காணிக்கப்படுவதில்லை. இதனால்மிகச்சரியாக கணிக்க முடியவில்லை என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வளிமண்டல அடுக்குகளில் காற்றில் ஏற்படும் மாற்றங்களைக் கணிப்பது மற்றும்வானிலை மாடல்களை உருவாக்குவது போன்றவற்றை மேம்படுத்தும் திட்டம் உள்ளதா? என மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலர் எம்.ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, அவர் ‘இந்து தமிழ் திசை’யிடம் தெரிவித்ததாவது:
கடல் பரப்பில் ஏற்படும் வெப்பம் காரணமாக இந்திய கடலோர மாவட்டங்களில் இதுபோன்று அதிகனமழை பெய்வது அதிகரித்துள்ளது. இதைக் கணிப்பதும் சிரமம். தரவுகள் பெறுவதை அதிகரிக்கும்போது மாடல்களின் தரம் மேம்படும். அதைக் கொண்டு கணிக்கும்போது வானிலை முன்னறிவிப்பும் மேம்படும்.
தமிழகத்தில் சென்னை, காரைக்கால் ஆகிய இடங்களில் வளிமண்டல அடுக்கில் காற்றில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து காலை மற்றும் மாலை வேளைகளில் கண்காணிப்பு கருவிகளை பலூன்களில் பறக்க விட்டு தரவுகள் சேகரிக்கப்படுகிறது. காலை மற்றும் மாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் வளிமண்டல மாற்றத்தை கண்காணிப்பதில்லை. அதனால் இடைப்பட்ட நேரத்தில் ‘ட்ரோன்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பலூன்களைப் போன்று ‘ட்ரோன்’கள் உயரமாக செல்லாவிட்டாலும், அது செல்லும் வரை கிடைக்கும் தரவுகளைப் பெற்று வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த முடியும். மேலும் சென்னை - அந்தமான் இடையே ஏராளமான சரக்கு மற்றும் பயணிகள் கப்பல்கள், ஆராய்ச்சி கப்பல்கள் இயக்கப்படுகின்றன. அவற்றிலிருந்தும் ‘ட்ரோன்’ உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு வளிமண்டல அடுக்குகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன் மூலம் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பையும் மிகச் சரியாக வழங்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT