Published : 01 Jan 2022 10:24 AM
Last Updated : 01 Jan 2022 10:24 AM
மதுரை மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் மேயர் பதவியை பிடிக்க கவுன்சிலராகும் முயற்சியில் முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ குடும்பத்தினர் கடும் போட்டியில் இறங்கியுள்ளனர்.
மதுரை மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் நேர்காணல் நடத்தப்படுகிறது.
எப்படியாவது கவுன்சிலர் சீட் பெற வேண்டும் என்பதில் வார்டு செயலாளர்கள் உட்பட பலரும் முயற்சி செய்து வருகின்றனர். அதேநேரத்தில் மேயர் பதவியை பிடிப்பதில் மாவட்ட நிர்வாகிகள் பலர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் முன்னாள் அமைச்சர், திமுக எம்எல்ஏ குடும்பத்தினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது:
மேயர் தேர்வு மறைமுகத் தேர்தல் மூலமே நடக்க உள்ளது. மதுரை மேயர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய நிலையில் கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றால்தான் மேயராக முடியும் என்ற சூழல் உள்ளது. இதனால் திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்கள் குடும்பப் பெண்களை கவுன்சிலராக்கி மேயராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதில் மதுரை மாநகர் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் பொன்.முத்துராமலிங்கம். இவர் தனக்கு அல்லது மகன் பொன்.சேதுவுக்காக கடந்த சட்டப் பேரவை தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியை கேட்டார். ஆனால் தெற்கு மாவட்டச் செயலாளரான கோ.தளபதி வடக்கு தொகுதியில் சீட் பெற்று வெற்றி பெற்றார்.
இதனால் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு பணியாற்றி, தளபதியை வெற்றிபெறச் செய்ததால், மேயர் பதவியை தனது மருமகள் மோஸ்னிக்கு தர வேண்டும் எனக் கேட்கிறார் பொன்.முத்து ராமலிங்கம். மோஸ்னி வார்டு 32-ல் (சொக்கிகுளம்) போட்டியிட சீட் கேட்டுள்ளார். கோ.தளபதியின் மகள் மேகலா சீட் கேட்டு வார்டு 98-ல் (திருப்பரங்குன்றம்) மனு அளித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் மேயர் தேர்தல் நடத்த திட்டமிட்டபோது வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் திமுக சார்பில் தனது மகள் மட்டுமே தைரியமாக மனு அளித்தார். ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், தேர்தல் நேரத்தில் பொன்.முத்துராமலிங்கத்துக்காக வடக்கு மாவட்டத்தை விட்டுக் கொடுத்ததாகவும், அமைச்சர் வாய்ப்பு மறுக்கப்பட்டபோதும், அதை ஏற்றுக்கொண்டதாகவும், இதனால் தனது மகளுக்கு வாய்ப்பு தர வேண்டும் என தலைமையிடம் தளபதி கேட்டு வருகிறார். பொன்.முத்துராமலிங்கம் விரும்பினால் அவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவியை தரலாம் எனத் தெரிவித்து வருகிறார்.
இவர்கள் 2 பேருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர் களுடன் ஆனையூர் பகுதிச் செயலாளர் பொம்மத்தேவன் மகள் ரோகிணி (வார்டு 17), நாராயணபுரம் வார்டு செயலாளர் சசிக்குமார் மனைவி வாசுகி (வார்டு 5) ஆகியோர் தரப்பிலும் முயற்சி செய்து வருகின்றனர்.
இது தவிர முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவிடம் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்த சின்னம்மாள் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் நம்பிக்கையோடு உள்ளனர்.
2 மாவட்டச் செயலாளர்கள் குடும்பத்தினர் கடும் போட்டியில் உள்ள நிலையில், அமைச்சர் பி.மூர்த்தி, புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.மணி மாறன் ஆகியோரிடம் 29 வார்டுகள் உள்ளன.
மாநகரில் உள்ள மத்திய தொகுதியில் வென்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இவர்கள் அளிக் கும் ஆதரவை பொருத்து மேயர் வேட்பாளர் யார் என்பது தெரியும்.
பொன்.முத்துராமலிங்கம், கோ.தளபதி ஆகியோருக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால், சாதாரண கட்சி நிர்வாகி ஒருவரை மேயராக்கும் மறைமுகத் திட்டமும் உள்ளதாக தகவல் பரவுகிறது.
மேயர் வேட்பாளர் தேர்வில் வெற்றி பெறப்போவது யார் என்பதே தற்போது மதுரை திமுகவினரின் முக்கிய விவாதமாக உள்ளது. நேரடித் தேர்தல் என்றால் இந்த அளவு குழப்பம் இருந்திருக்காது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT