Published : 31 Dec 2021 05:00 PM
Last Updated : 31 Dec 2021 05:00 PM

10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள்: மழைக்கு தாங்காத சென்னை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம்

சென்னை: "10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள்" என்று மழைக்கு தாங்காத சென்னை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முந்தைய அதிமுக ஆட்சி காலத்தின் செயல்பாடுகளை விமர்சித்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் கடந்த ஒரு மாதமாக மழை ஓய்ந்திருந்த நிலையில், நேற்று பெய்த திடீர் கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. நேற்று பிற்பகல் 12.20 மணி அளவில் கிழக்கு திசையில் கருமேகங்கள் திரண்டு மாநகரப் பகுதிக்குள் நுழைந்து திடீரென கனமழை கொட்டியது. அப்போது கடும் காற்றும் வீசியது. மாலை வரை விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில், 4 மணிக்குமேல் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இன்றும் சென்னையில் கனமழை நீடித்துள்ளது.

தற்போது சென்னை சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், திடீர் மழைக்கு வெள்ளமென தேங்கிய நீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, சில நிகழ்ச்சிகளுக்காக திருச்சி சென்றுவிட்டு திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் மழைநீரை அகற்றும் பணியை ஆய்வு செய்தார். ஆழ்வார்ப்பேட்டை பகுதி சாலைகளில் நடைபெற்றும் வரும் மழைநீர் அகற்றும் பணியை ஆய்வு செய்தபிறகு முதல்வர் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

எதிர்பாராத விதமாக இவ்வளவு பெரிய மழை பெய்துள்ளது...

"வானிலை மையத்தினர் வழக்கமாக முன்னெச்சரிக்கைக் கொடுப்பார்கள். இம்முறை அவர்களே ஏமாந்துள்ளனர். அதற்கு அவர்கள் வருத்தமும் தெரிவித்துளளனர். எதிர்பாராமல் பேய்மழையாய் கொட்டிய மழைநீர் அங்கங்கே தேங்கியுள்ளன. நான் திருச்சியிலிருந்து வந்த உடனே மாநகராட்சி கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள war room-ல் சென்று என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர்களிடம் கலந்து பேசினேன். தற்போது நகரில் தேங்கியுள்ள நீரை அகற்ற அங்கே பம்ப்செட் அமைத்து நீர் அகற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அவர்கள் பணி திருப்தியாக இருக்கிறது. நிச்சயமாக இன்றைக்குள்ளாக அனைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும். சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் இன்றைக்குள் நிறைவடையும்."

திடீர் மழை எனும்போது அதை அறிவிக்கமுடியாத நிலையில் வானிலை மையத்தின் முன்னெச்சரிக்கை கருவியில் ஏதோ பிரச்சினை உள்ளது. அதை மாற்ற மத்திய அரசுக்கு ஏதேனும் கோரிக்கை வைக்கிறீர்களா?

"அது அவர்கள் செய்ய வேண்டிய பணி. இருந்தாலும் நீங்கள் சொன்னதற்காக நானும் அவர்களிடம் நினைவுபடுத்துவேன்."

மீண்டும் மீண்டும் தேங்கியுள்ள இடத்திலேயே நீர் தேங்கியுள்ளது. திட்டமிடாததுதான் காரணமா?

"10 ஆண்டுகளாக குட்டிச்சுவாக்கி வைத்திருக்கிறார்கள். அதைப்பற்றி ஏற்கெனவே கூறியுள்ளோம். அதையெல்லாம் விமர்சனம் செய்ய நான் தயாராக இல்லை. தற்போது உள்ள பிரச்சினைகளை தீர்க்கவேண்டும். அதுதான் இப்போது, அடுத்த மழைக்காலம் வருவதற்குள் இப்பிரச்சினைக்கெல்லாம் நிச்சயம் தீர்வுகாணப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன" என்றார் முதல்வர் ஸ்டாலின்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x