Published : 31 Dec 2021 01:18 PM
Last Updated : 31 Dec 2021 01:18 PM

புத்தாண்டு: வண்டலூர் பூங்காவில் கரோனா கட்டுப்பாடுகள்

சென்னை வண்டலூர் அண்ணா உயிரியில் பூங்கா | கோப்புப் படம்.

சென்னை: புத்தாண்டை முன்னிட்டு வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா வருவோருக்காக முகக்கவசம் அணியாதவர்களுக்கு அனுமதியில்லை என்பன உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி இன்று நள்ளிரவு 12 மணிவரை கோயில்களைத் திறந்து வைக்க அரசு அனுமதி அளித்துள்ளது என்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார். சென்னையில் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். பைக் ரேஸ், மது அருந்தி பைக் ஓட்டுவது போன்றவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரைக்குத் தடை உள்ளிட்ட புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இன்று நள்ளிரவு நட்சத்திர ஓட்டல்கள் கண்காணிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் பார்வையாளர்களுக்காக பல்வேறு நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது. புத்தாண்டு தினமான நாளை (சனிக்கிழமை) ஏராளமான மக்கள் அங்கு பார்வையிட வருவார்கள் என்பதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய, மாநில அரசுகள் மற்றும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் வழங்கிய பல்வேறு அறிவுரைகளைப் பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் புத்தாண்டில், உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் தங்கள் சொந்தப் பாதுகாப்பு மற்றும் விலங்குகளின் பாதுகாப்பிற்காகப் பின்வரும் கோவிட் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1) பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.

2) பரிசோதனையில் உடல் வெப்பநிலை மாறுபாடுகள் உள்ளவர்கள் பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.

3) பொதுமக்களின் பயன்பாட்டிற்காகப் பூங்காவினுள் பல்வேறு இடங்களில் கை கழுவும் வசதிகள் மற்றும் தானியங்கி கை சுத்திகரிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன.

4) பார்வையாளர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதமாக 2 மீட்டர் தூர இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

5) முகக்கவசம் இல்லாதவர்கள் நுழைவுச்சீட்டு வழங்கும் இடத்தில் முகக்கவசங்களை வாங்கிக் கொள்ளலாம்.

6) முகக்கவசம் அணியாதவர்கள் பூங்காவினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பூங்காவிற்குள் நுழையும் பார்வையாளர்கள் கிருமி நீக்கம் செய்யும் கால் குளியல் (பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல்) வழியாகவும், வாகனங்கள் நுழையும்போது டயர்கள் கிருமிநாசினியில் நனைந்த பிறகே செல்ல வேண்டும்.

மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, கோவிட் தொடர்பான வழிமுறைகள் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிக்கப்படுகின்றது. பார்வையாளர்கள் கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தல்கள் அடங்கிய பலகை பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் நடமாட்டம் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவ்வப்போது கரோனா நெறிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வரப்படுகிறது.

பார்வையாளர்களால் கோவிட்-19 தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதை மேற்பார்வையிடவும் மற்றும் கண்காணிக்கவும் துணை இயக்குநர் (அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா) தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தாண்டில் அனைவருக்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பான பூங்கா அனுபவத்தைப் பெற வாழ்த்துகிறது''.

இவ்வாறு அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x