Published : 31 Dec 2021 11:04 AM
Last Updated : 31 Dec 2021 11:04 AM

ஆங்கில புத்தாண்டு 2022 : வைகோ, டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

கோப்புப் படம்

சென்னை: ஆங்கில புத்தாண்டு 2022-ஐ வரவேற்கும் விதமாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் பொதுமக்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்:

"2021ம் ஆண்டு அரசியலில் தமிழர்களுக்கு வசந்தத்தின் வெளிச்சம் பிரகாசித்த ஆண்டாகும்.

தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாள் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததோடு, தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்று கருணாநிதி குறிப்பிட்ட முள்ளை அகற்றி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற புதிய விடியலை தமிழக முதல்வர் பிரகடனம் செய்தது நூற்றாண்டு கால திராவிட இயக்கத்திற்கு ஒளி சேர்ப்பதாகும்.

ஆனால், இலங்கைத் தீவை வளைத்து, தன்னுடைய ஆதிக்கத்திற்குக் கீழே கொண்டுவந்து அநீதி விளைவிப்பதற்கு சீன அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்பட்டு சிங்களச் சிறைகளில் அடைக்கப்படுவதும் தொடர்கதையாகி விட்டது. இதைத் தடுப்பதற்கு மத்திய அரசு சிறு துரும்பைக்கூட தூக்கிப்போடவில்லை.

ஈழத் தமிழர் இனப்படுகொலை நடத்தப்பட்டதன் தொடர்ச்சி இன்னும் நின்றபாடு இல்லை. சிங்களவரின் அடிமை நுகத்தடியிலிருந்து தமிழர்கள் விடுபடவும், சுதந்திரமான தமிழ் ஈழம் அமையவும், சிங்களவர் நடத்திய இனக்கொலைக்கு உரிய பன்னாட்டு விசாரணை நடைபெறவும், தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தவும் வேண்டிய நடவடிக்கைகளை உலகெங்கும் உள்ள தமிழர்கள் 2022 உதயத்தில் சூளுரைப்போம்.

கரோனா, ஒமைக்ரான் உள்ளிட்ட நோய்களின் பிடியிலிருந்து மக்கள் முழுமையாக விடுபட்டு, ஆரோக்கியம் பெறவும் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றி பெறட்டும். சாதி, சமய மோதல்கள் இல்லாத சமத்துவமும், சகோதரத்துவமும், சமூகநீதியும் தமிழகத்தில் முழுமையாக நிலைநிறுத்தப்படட்டும்."

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

இதேபோல் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்:

"எல்லைகளைக் கடந்து உலகெங்கும் கொண்டாடப்படுகிற ஆங்கிலப் புத்தாண்டில் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மனிதநேயம் தழைத்திட, எல்லாரும் எல்லாமும் பெற்றிட இல்லாமை இல்லாத நிலை உருவாகிட 2022 புத்தாண்டில் வழி பிறக்கட்டும். அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனாவின் புதுவடிவமான ஒமைக்ரான் பயம் நீங்கி, ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் ஒவ்வொருவரும் வாழ்ந்திட புத்தாண்டில் இறையருளை வேண்டுகிறேன்.

தமிழகத்தின் உரிமைகளையும், தமிழ்நாட்டின் நலன்களையும் காத்து நிற்பதற்கான வலிமையைப் புத்தாண்டு தந்திடட்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்து மாண்புகளோடும், வலிமையோடும் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்கான நம்பிக்கையை இப்புத்தாண்டு விதைக்கட்டும். தொழில்களும், விவசாயமும் செழித்தோங்கி உழைக்கிற மக்கள் அனைவருக்கும் 2022 புத்தாண்டில் நன்மைகள் நிறைந்திட வாழ்த்துகிறேன்."

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x