Published : 31 Dec 2021 08:26 AM
Last Updated : 31 Dec 2021 08:26 AM
சென்னை: சென்னையில் கடந்த ஒரு மாதமாக மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று எதிர்பாராத வகையில் பெய்த திடீர் கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மவட்டங்களில் இன்று கல்வி நிறுவனங்கள், அத்தியாவசியப் பணிகள் தவிர்த்த அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று எதிர்பாராதவிதமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இன்று 31.12.2021 ஒரு நாள் மட்டும் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், அத்தியாவசிய சேவைகள் தவிர, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆர்பிஐ சுரங்கப்பாதை, ரெங்கராஜபுரம் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
3 பேர் உயிரிழப்பு: புளியந்தோப்பில் மீனா (40) என்பவர், கடைக்கு செல்வதற்காக வெளியே வந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ஓட்டேரியில் அம்மா உணவகம் அருகே நடந்து சென்ற 70 வயது மூதாட்டி தமிழரசி மின்சாரம் தாக்கி உயரிழந்தார். மயிலாப்பூரில் 13 வயது சிறுவன் லட்சுமணன், வீட்டு வாசல் அருகே தேங்கியிருந்த தண்ணீரில் கால் வைத்தபோது மின்சாரம் தாக்கி இறந்தார்.
மழை முன்னறிவிப்பு: தமிழக கடற்கரையை ஒட்டிநிலவும் வளிமண்டல மேலடுக்குசுழற்சியால், 31-ம் தேதி கடலூர்,விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழையும்,இதர கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.
ஜன.1-ம் தேதி கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிருஇடங்களில் இடியுடன் கனமழையும், இதர கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT