Published : 30 Dec 2021 10:15 PM
Last Updated : 30 Dec 2021 10:15 PM
சென்னை: சென்னையில் இன்று பகல் 12 மணி முதல் விட்டுவிட்டுப் பெய்துவரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
காலையில் வானம் இருண்டிருந்தது. லேசாக ஆங்காங்கே தூரல் இருந்தது. மதியம் 12 மணி போல் வேகமெடுத்த மழை 3 மணியளவில் நகரையே மிரட்டியது. திடீர் மழையால் சாலைகள் வெள்ளக்காடானது. காலையில் அலுவலகளுக்குச் சென்றோர் வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. நகர் முழுவதுமே கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. சென்னையின் பிரதான பகுதியான அண்ணா சாலையில் வாகனங்கள் கிலோ மீட்டர் கணக்கில் நகர முடியாமல் அணிவகுத்து நின்றன.
கெங்குரெட்டி, ரெங்கநாதன், ஆர்பிஐ, மேட்லி சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. சாலை மார்க்கமாக எங்கு சென்றாலும் போக்குவரத்து முடக்கம் என்பதால், பெரும்பாலானோர் மெட்ரோ ரயில் சேவையை நாட, வழக்கமாக இரவு 11 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை இன்று நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாலை 6 மணி நிலவரப்படி சென்னையில் பதிவான மழையளவு (மி.மீ)
மயிலாப்பூர் - 207
எம்ஆர்சி நகர் - 175
நுங்கம்பாக்கம் - 140
ஆல்வார்பேட் - 133
நந்தனம் - 100
மீனம்பாக்கம் - 98
வளசரவாக்கம் - 94
வானகரம் - 87
செம்பரம்பாக்கம் - 82
கிண்டி - 81
தொண்டியார்பேட்- 72
முகப்பேர் - 71
இந்த மழையளவு வானிலை ஆய்வு மையங்களால் கணிக்கப்படவில்லை. டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1, 2 தேதிகளில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக் கூடும் என்று மட்டுமே கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று பதிவாகியுள்ள இந்த மழையளவு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்னும் சில மணி நேரம் கனமழை நீடிக்கும் என முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்லது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமான மழை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 நாட்கள் இப்படித்தான்: (30.12.2021) அன்று கடலோர தமிழகத்தில் மிதமான மழை பெய்யும். விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும்.
(31.12.2021) அன்று கடலூரில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் மழை பெய்யலாம்.
(01.01.2022) புத்தாண்டு நாளில் செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்காலிலும் ஆங்காங்கே கனமழைக்கு வாய்ப்புண்டு. எஞ்சிய கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்யும்.
(02.01.2022) அன்று கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புண்டு.
(03.01.2022) அன்று, தென் தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எஞ்சிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தண்ணீர் திறப்பு: சென்னையில் 5 மணி நேரத்தில் 20 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடியும், புழல் ஏரியில் இருந்து 750 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT