Published : 30 Dec 2021 09:17 PM
Last Updated : 30 Dec 2021 09:17 PM
கோவை: கரோனா பரவும் அச்சத்தால்,கோவை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால், கோவை மாவட்டத்தில் சாலைகள், பூங்காக்கள் போன்ற பொது இடங்கள், தனியாருக்கு சொந்தமான உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் நாளை (31-ம் தேதி) இரவு பொதுவாக நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். கூட்டம் கூடி, புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்தும் போது, தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட, கரோனா தொற்றானது மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும், சில வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் மூலம் கரோனா தொற்றானது தற்போது மீண்டும் பரவி வருகின்ற சூழலில், நோய்த் தடுப்புப் பணிகளை மேலும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. எனவே, கோவை மாவட்டத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் இதர இடங்களில் நாளை (31-ம் தேதி) இரவு நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதில்லை. மேற்கண்ட நடைமுறைகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாகனங்கள் பறிமுதல்: கோவை மாநகர காவல்துறையின் துணை ஆணையர் (போக்குவரத்து) எஸ்.ஆர்.செந்தில்குமார் கூறும்போது, ‘‘மாநகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மதுபோதையில் வாகனங்களை ஓட்டுவோர் மீது வழக்குப்பதிந்து, அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள், பிற வாகன ஓட்டுநர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால், மாநகரில் அவிநாசி சாலை, வடகோவை, காந்திபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மேம்பாலங்கள்நாளை (31-ம் தேதி) இரவு நேரம் மூடப்படும்,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT