Published : 30 Dec 2021 05:56 PM
Last Updated : 30 Dec 2021 05:56 PM

அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது; பால புரஸ்கார் விருதுக்கு மு.முருகேஷ் தேர்வு

அம்பை, மு.முருகேஷ் | கோப்புப் படங்கள்.

சென்னை: தமிழின் முக்கியமான பெண் எழுத்தாளர் அம்பைக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை இலக்கியப் பிரிவில் வழங்கப்படும் பால புரஸ்கார் விருது இந்த ஆண்டு கவிஞர் மு.முருகேஷுக்கு வழங்கப்படுகிறது.

நாட்டின் 24 மொழிகளில் இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பு செய்துவரும் படைப்பாளிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. 2021-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர்களின் பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பை எழுதிய 'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ற சிறுகதை தொகுப்புக்காக இந்த விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் பெண்ணியம் சார்ந்து படைப்புகளை எழுதி வருபவர்களில் முக்கியமானவர் அம்பை. தமிழில் இயங்கிவரும் எத்தனையோ பெண் படைப்பாளிகள் மத்தியில் சமரசமில்லாத பெண்ணியக் கோட்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தனது படைப்புகளின் மூலம் பெண்ணியம் சார்ந்த வலிமிகுந்த உணர்வுகளை கூர்மையோடும் அழகியலோடும் வெளிப்படுத்திய வகையில் அம்பையே முதல் இடத்திலும் முன்னோடியாகவும் நிற்கிறார். அவரது 'அம்மா ஒரு கொலை செய்தாள்', 'காட்டில் ஒரு மான்', 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை', 'சிறகுகள் முறியும்' போன்ற படைப்புகள் வாழ்க்கையில் பெண்ணுக்கான இடத்தையும் வெளியில் சொல்ல இயலாத மன இயல்புகளையும் ஆழ்ந்த சிரத்தையோடு வெளிப்படுத்தியுள்ளன.

அம்பை, மு.முருகேஷ் நூல்கள்

விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அம்பையின் நூல் 'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பாகும். இந்நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

பால புரஸ்கார் விருது: ஜப்பானியக் கவிதை வடிவமான ஹைக்கூ தளத்தில் நீண்டகாலமாக இயங்கி தனக்கென்று ஒரு இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர் கவிஞர் மு.முருகேஷ். பின்னர் சிறுவர்களுக்கான நூல்களைப் படைப்பதிலும் ஈடுபடத் தொடங்கினார்.

'பூவின் நிழல்' உள்ளிட்ட 8 கவிதை நூல்களும், 'விரல் நுனியில் வானம்' எனத் தொடங்கி 'குக்கூவென...' வரை 11 ஹைக்கூ நூல்களையும், 'இருளில் மறையும் நிழல்கள்' என்ற சிறுகதை நூலையும் முருகேஷ் படைத்துள்ளார். இதுமட்டுமின்றி, 'பெரிய வயிறு குருவி' தொடங்கி 'சின்னச் சிறகுகளால் வானம் அளப்போம்' வரை 18 குழந்தைகளுக்கான நூல்களைப் படைத்துள்ளார். மேலும் பிற நூல்கள் வரிசையில் 20 என ஏராளமான நூல்களின் ஆசிரியராக முருகேஷ் திகழ்கிறார்.

மு.முருகேஷ், 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' என்ற குழந்தை இலக்கிய நூலுக்காக இம்முறை பால புரஸ்கார் விருது பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x