Published : 30 Dec 2021 04:47 PM
Last Updated : 30 Dec 2021 04:47 PM
சென்னை: சென்னை புத்தகக் காட்சி விழாவில் சமஸ், ஆசை, அ.வெண்ணிலா உள்ளிட்ட 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்பட உள்ளது.
சென்னையில் ஆண்டுதோறும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் புத்தகக் காட்சி, நடைபெறுவது வழக்கம். கரோனா அச்சுறுத்தல்கள் ஒரு பக்கம் இருந்தாலும் புத்தகக் காட்சியையும் வாசகர்கள் வெகு ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர். இந்த ஆண்டும் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் 45-வது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறும் என்று பபாசி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகக் காட்சி விழா தொடக்க நாளின்போது ஆண்டுதோறும் தமிழில் சிறப்பாக செயல்பட்டு வரும் படைப்பாளிகளும் பதிப்பகத்தாரும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள்.
வரும், ஜனவரி 6-ம் தேதி அன்று சென்னை புத்தகக் காட்சி தொடக்க விழாவுக்கு பபாசி புரவலர் நல்லி குப்புசாமி செட்டி தலைமையேற்க, தமிழக முதல்வர் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்கிறார். மேலும், கலைஞர் பொற்கிழி விருதுகள் மற்றும் பபாசி விருதுகளை வழங்கிப் பேருரை ஆற்றுகிறார். இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரை ஆற்றுகிறார். விழாவுக்கு வரவேற்புரை, பபாசி தலைவர் குமரன் பதிப்பகம் வயிரவன், நன்றியுரை எஸ்.கே.முருகேசன்.
கலைஞர் பொற்கிழி விருது:
இவ்விழாவில் கலைஞர் பொற்கிழி விருதுக்கு உரைநடை: சமஸ், நாடகம்: ப்ரஸன்னா ராமசாமி, கவிதை: ஆசைத்தம்பி (ஆசை), புதினம்: அ. வெண்ணிலா, பிறமொழி: பால் சக்கரியா, ஆங்கிலம்: மீனா கந்தசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பதிப்பாளர் விருதுகள்:
சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் விருது: ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம் (மணிவாசகர் பதிப்பகம்), ரவி தமிழ்வாணன், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன் விருது: நாதம் கீதம் புக் செல்லர்ஸ், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான கவிஞர் அழ. வள்ளியப்பா விருது: திருவை பாபு, சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது: முனைவர் தேவிரா, சிறந்த பெண் எழுத்தாளருக்கான பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது: பாரதி பாஸ்கர், சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது: கு.வை.பாலசுப்பிரமணியன் ஆகியோர் பெறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT