Published : 30 Dec 2021 02:18 PM
Last Updated : 30 Dec 2021 02:18 PM

"நீட் தேர்வு விலக்கு மசோதாவை பரிசீலிக்க ஆளுநருக்கு இன்னும் எத்தனை மாதம் தேவை?"- முத்தரசன் கேள்வி

கோப்புப் படம்

சென்னை: "நீட் தேர்வு விலக்கு மசோதா நான்கு மாத காலமாக ஆளுநரின் பரிசீலனையில் இருப்பது வியப்பளிப்பது மட்டுமல்ல; வேதனையளிக்கின்றது. இன்னும் எத்தனை மாத காலங்கள் தேவைப்படும்?" என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக் குழு செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் நுழைவுத் தேர்வு காரணமாக தமிழகத்து கிராமப்புற மாணவர்கள் மிகக் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ளனர். பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த போதும், நீட் நுழைவுத் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெற முடியவில்லை. தாங்கள் மருத்துவர் ஆக வேண்டும் என்கிற கனவு பகற் கனவாகவே முடிகின்றது.

இதன் காரணமாக அரியலூர் அனிதா உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலைமைகள் மாற்றப்பட வேண்டும் என்றும், நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விளக்களித்திட வேண்டுமென ஒட்டு மொத்த தமிழகமும் தொடர்ந்து கோரி வருகின்றது. எல்லா வளர்ச்சிக்கும் மேலாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் நீட் தேர்வு விலக்கு மசோதா, ஒருமனதாக கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து தமிழக முதல்வர் இருமுறை ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார். ஆனால் ஆளுநர் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை. இது தொடர்பாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆளுநர் மாளிகைக்கு கடிதம் எழுதினார். அதற்கு, மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு மாத காலமாக பரிசீலனையில் உள்ளதாக தெரிவிப்பது வியப்பளிப்பது மட்டுமல்ல; வேதனையளிக்கின்றது. பேரவையின் மசோதா பரிசீலனையில் நான்கு மாத காலமாக உள்ளது எனில், இன்னும் எத்தனை மாத காலங்கள் தேவைப்படும் என்பதனை ஆளுநர் மாளிகை பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்திட வேண்டும்.

மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் ஒரு மாவட்ட ஆட்சியர், நூறு நாட்களில் கோப்புகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும், இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருப்பதுடன், அவர்களது மாதாந்திர ஊதியத்தை நிறுத்தி வைக்கப்படும் என பணியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். நாட்டிற்கே முன்னுதாரணமாக விளங்குகிறது ஆட்சியரின் உத்தரவு. தமிழக ஆளுநர் முன்னுதாரணமாக விளங்க வேண்டுமென விரும்புகின்றோம்.

காலதாமதம் செய்யாமல் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்" என்று முத்தரசன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x