Published : 30 Dec 2021 12:40 PM
Last Updated : 30 Dec 2021 12:40 PM

ஆராய்ந்து மோசடிகளைக் களைந்த பின்னரே நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

அமைச்சர் ஐ.பெரியசாமி | கோப்புப் படம்.

சென்னை: மோசடிகளைக் களைந்து, நன்கு ஆய்வு செய்த பின்புதான் 13 லட்சத்து 40 ஆயிரம் பேரின் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி நகைக் கடன் தள்ளுபடி செய்யாமல் ஆளும் திமுக அரசு இப்பிரச்சினையை தவறாகக் கையாண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு சுமத்தின. அனைவருக்கும் நகைக் கடன் தள்ளுபடி வழங்கப்படாமல், பயிர்க் கடன் ரத்து செய்யப்பட்டவர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி இல்லை, 5 பவுனுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு நகைக் கடன் இல்லை என்பன போன்ற விதிகளை வகுத்து நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகக் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

''நகைக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. 5 பவுனுக்கு மேல் உள்ள தகுதி பெறாத நகைக் கடன் என்ற கணக்கில் மொத்தம் 35 லட்சம் பேர் வந்துவிடுகிறார்கள். 35 லட்சம் நகைக் கடன் வந்துவிடுகிறது. எனவே இதில் நன்கு ஆய்வு செய்து 13 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி செய்துள்ளோம்.

நகைக் கடன் பெற்றவர்கள் அனைவருக்கும் தள்ளுபடி செய்யவேண்டும் என்றால், ஒரு குடும்பத்தில் ஒருவர்தான் கணக்கு. ஒரு குடும்பத்தில் பத்துப் பேர், இருபது பேர் கூட இருப்பார்கள். அவ்வளவுபேரும் கடன் வைத்திருப்பார்கள். அனைவருக்கும் எப்படி தள்ளுபடி கொடுக்கமுடியும். ஆனால் பலரும் திட்டமிட்டு 5 பவுனுக்கு மேல்தான் வைத்திருக்கிறார்கள். மொத்தம் பார்த்தால் 100 பவுன் வருகிறது. எப்படி கடன் தள்ளுபடி தர முடியும். கொடுக்க முடியாது.

இதில் நமது அரசாங்கம் ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு மேல் நகைக் கடன் வைத்திருந்தால் யாருக்கும் கொடுக்கப்படவில்லை. ஒரு குடும்பம்தான் கணக்கு. நாங்கள் முழுக்க ஆராய்ந்து ஆய்வு செய்து முறைகேடுகள் எல்லாம் களைந்து, 40 கிராமுக்குக் கீழே இருக்கக் கூடிய மக்களுக்குத்தான் கொடுத்திருக்கிறோம். 40 கிராமையும் சேர்த்துக் கூடுதலாக வைத்திருந்தவர்கள் பெற்ற கடனே 48 லட்சம் வருகிறது. அதனைக் கணக்கில் வைத்துப் பார்க்கவேண்டும். இது புரியாமல் ஏதேதோ செய்தி பரப்புகிறார்கள். இது சிலர் வயித்தெரிச்சலில் பேசுகிறார்களே தவிர வேறு காரணங்கள் எதுவும் இல்லை. அரசுப் பணம் அதுவும் ஸ்டாலின் ஆட்சியில் மக்களின் வரிப் பணம் ஒருபைசா கூட வீணாகாமல் மக்களுக்குக் கொண்டுபோய் சேர்ப்பதுதான் முதல்வரின் லட்சியம், கொள்கை''.

இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x