Published : 30 Dec 2021 11:26 AM
Last Updated : 30 Dec 2021 11:26 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே இன்று (டிச.30) காலை மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் (சிஐஎஸ்எஃப்) துப்பாக்கி சூடும் பயிற்சியின்போது குண்டடிப்பட்டு சிறுவன் ஒருவர் காயம் அடைந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள கொத்தமங்கலத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். இவரது மகன் புகழேந்தி (11). இவர், நார்த்தாமலையில் உள்ள தனது தாத்தா வீடான முத்து வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில், இன்று (டிச.30) புகழேந்திக்கு தலையில் குண்டடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள காவல் துறைக்கு சொந்தமான பயிற்சி மையத்தில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது வெளியேறிய குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
காயம் அடைந்த புகழேந்தியை குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து, சிகிச்சை பெற்று வருகிறார். மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளார்.
இதற்கிடையில் இந்த சம்பவத்தை கண்டித்து புகழேந்தியின் உறவினர்கள் நார்த்தாமலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை- திருச்சி இடையே கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறையினர் தரப்பில் கூறியது: தமிழ்நாடு காவல் துறைக்கு சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் புதுக்கோட்டை- திருச்சி சாலையில் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரத்தில் உள்ளது. இம்மையத்தைச் சுற்றிலும் சுமார் 500 அடி உயரமுள்ள ஏராளமான மலைகள் உள்ளன. அடர்ந்த காட்டுப்பகுதியாகவும் உள்ளது. இங்கு, தமிழ்நாடு போலீஸார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவர்.தவிர, மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோர் மாவட்ட காவல் கண்கணிப்பாளரின் அனுமதியைப் பெற்று பயிற்சியில் ஈடுபடுவர். அதன்படி, இம்மையத்தில் கடந்த சில தினங்களாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
துப்பாக்கியில் இருந்து வெளியேறும் குண்டுகள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக்கூடியவை. இடையில் மலைகள் உள்ளதால் ஊருக்குள் செல்லாது.
இதுபோன்று, துப்பாக்கி சுடும் பயிற்சி காலத்தில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் விதமாக மலைகள் மீது சிவப்பு நிற கொடிகள் பறக்கவிடப்படும். ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்படும். இந்த நடவடிக்கைகள் உள்ளூர் மக்களுக்கு நன்கு பழக்கப்பட்டவை .
சில நேரங்களில் காட்டுப்பகுதியில் சிதறிக்கிடக்கும் குண்டுகளை சிறுவர்கள் சேகரிப்பதுண்டு. இந்நிலையில், சிறுவனின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சிறுவனின் தலைப்பகுதியில் ஸ்கேன் முடிவைக்கொண்டும் விசாரணை நடைபெறுகிறது. இவ்வாறு தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT