Published : 30 Dec 2021 11:14 AM
Last Updated : 30 Dec 2021 11:14 AM

கரோனா கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்த வேண்டாம்: ராதாகிருஷ்ணன்

கோப்புப் படம்

சென்னை: கரோனா கட்டுப்பாடுகளை மக்கள் அலட்சியப்படுத்துவதே ஒமைக்ரான் பரவலுக்குக் காரணம் என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உருமாறிய கரோனா வகையான ஒமைக்ரான் தற்போது நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தற்போது பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல் தமிழகத்திலும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது நாளை இரவு 12 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை பால் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஒமைக்ரான் பரல் குறித்து சென்னையில் இன்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''உலக அளவில் பரவி வரும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் இல்லை என்பதால் மக்களிடம் கவனக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை மக்கள் அலட்சியமாக எண்ண வேண்டாம். தடுப்பூசி எடுத்துக்கொண்டோம் என்று மக்கள் கரோனா கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்துவது நல்லதல்ல.

மேலும், பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் முழுமையாக அணிவதில்லை. குறிப்பாக அதிகாரிகள் யாரையாவது பார்த்தால் மட்டுமே பொது இடங்களில் உள்ள மக்கள் முகக்கவசம் சரிசெய்து கொள்கின்றனர். கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். கட்டுப்பாடு என்பது அதிகாரிகளுக்கு அல்ல மக்களுக்கு என்பதை உணர வேண்டும்.

கரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தினோம். நோய்க் கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாகக் கடைப்பிடித்ததே இதற்குக் காரணம். தற்போது அதனை மக்கள் அலட்சியப்படுத்துவதே ஒமைக்ரான் பரவலுக்குக் காரணம் ஒமைக்ரான் பரவல் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது''.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x