Published : 30 Dec 2021 07:15 AM
Last Updated : 30 Dec 2021 07:15 AM
மின் வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிய பிறகேமாதாந்திர மின் கணக்கீடு செய்ய இயலும் என மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த20 ஆண்டுகளில் 4.52 லட்சம் விவசாயிகள் இலவச மின் இணைப்புக்காக காத்திருக்கின்றனர். இவர்களில், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு ஒரே ஆண்டில் மின் இணைப்பு வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
2018 முதல் ஜிஎஸ்டி வரி
இதற்கிடையே, மின் துறையில்தற்போதுதான் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதுபோல எதிர்க்கட்சி துணைத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், மின்துறையில் 2018-ம் ஆண்டு முதல் ஜிஎஸ்டி விதிப்பு உள்ளது. அதேபோல, இலவச விவசாய மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தும் பணியும் தற்போது நடைபெறுவதுபோல தெரிவித்துள்ளார். 2017-ம் ஆண்டு தொடங்கி இதுவரை 2.66 லட்சம் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தற்போது, மின்மாற்றிகளில் டிடி மீட்டர் மற்றும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. டிடி மீட்டர் மூலம் குறைந்த தாழ்வழுத்த மின்சாரம், கூடுதல் பளு மின்சாரம், ஆயில்பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை அறிய முடியும்.
தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க கட்டமைப்புகளை வலுப்படுத்தும் பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, இதுவரை 6ஆயிரம் மின்மாற்றிகள் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளன.
மின் கம்பிகளில் மின்சாரம் கொண்டு செல்வதன் மூலம் 17 சதவீத மின்இழப்பு ஏற்படுகிறது. இதில், ஒருசதவீத இழப்பு என்பது ரூ.800கோடியாகும். எனவே, சூரியமின்சக்தி உற்பத்தி செய்யும்பணிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
3-ல் ஒரு பங்கு காலி
மின் வாரியத்தில் உள்ள 1.46லட்சம் பணியிடங்களில், தற்போது3-ல் ஒரு பங்கு இடங்கள் காலியாக உள்ளன. அந்த காலிப் பணியிடங்களை நிரப்பிய பிறகேமாதாந்திர மின் கணக்கீடு செய்யப்படும். சென்னை மாநகராட்சியில் பூமிக்கடியில் மின் வடம் அமைக்கும் பணிகள் முடிவடைந்தபிறகு, பிற மாநகராட்சிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
விரைவில் தமிழகத்தில் 12 புதிய பேருந்து நிலைய அறிவிப்புகள் வெளியாக உள்ளன. அதில், கரூர் புதிய பேருந்து நிலைய அறிவிப்பும் இடம்பெறும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT