Published : 30 Dec 2021 07:10 AM
Last Updated : 30 Dec 2021 07:10 AM

நீலகிரியில் புல்வெளிகளை மூடியது உறைபனி: அதிகாலை வெப்பநிலை 2 டிகிரியாக பதிவு

உதகை குதிரை பந்தய மைதானத்தில் பனி படர்ந்து வெள்ளைக் கம்பளம் போல் காட்சியளித்த புல்தரை. படம்: ஆர்.டி.சிவசங்கர்

உதகை

நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக நவம்பர் மாத தொடக்கத்தில் உறைபனி தொடங்கி, மார்ச்முதல் வாரம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக உறைபனிப் பொழிவு தள்ளிப்போனது.

நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் உறைபனிப் பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் உறைபனிப் பொழிவு மேலும் தள்ளிப்போனது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தொடங்கிய முதல் நாளே வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாக பதிவானது. தலைகுந்தா, அவலாஞ்சி, முக்கூர்த்தி, கேத்தி பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை குறைந்தது.

நேற்று அதிகாலை உதகை தாவரவியல் பூங்காமற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெட்பநிலை 2 டிகிரி செல்சியஸாக பதிவானது. உதகை குதிரை பந்தய மைதானம், அரசு தாவரவியல் பூங்கா, தலைகுந்தா, கேத்தி, லவ்டேல் ஆகிய பகுதிகளில் கடுமையான உறைபனி நிலவியது. புல்வெளிகள் அனைத்தும் உறைபனியால் வெள்ளைக் கம்பளம் விரித்தாற்போல் காட்சிஅளித்தன. தேயிலைச் செடிகள், மலைக் காய்கறி பயிர்கள், தாவரங்கள் என அனைத்தும் வெண் முத்துக்களாக காட்சியளித்தன.

மேலும் கடும் பனிப்பொழிவால் வாகனங்களில் டீசல் உறைவதால் காலையில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பகல் நேரத்திலேயே சாலை ஓரங்களில் தீ மூட்டி குளிர்காயும் சூழல் ஏற்பட்டுள்ளது. கை கால்கள் விரைத்துப் போகும் நிலை ஏற்பட்டதால், காலை வேளையில் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். காலையில் வெயில் இருந்த போதும் கடுமையான குளிர் வாட்டியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x