Published : 30 Dec 2021 07:26 AM
Last Updated : 30 Dec 2021 07:26 AM
மதுரை மத்திய சிறையில் நேற்று கைதிகளுக்குள் திடீரென ஏற்பட்ட மோதலில் சிலர் சுவரில் ஏறி கற்களை எடுத்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை அரசரடியில் உள்ள மத்திய சிறையில் 1,300-க்கும்மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணைக் கைதிகளுக்கான பிளாக்கில் இருந்த திருமங்கலத்தைச் சேர்ந்த ஆதிநாராயணன் (மருதுசேனை அமைப்பின் தலைவர்) உட்பட சில கைதிகளுக்கும், கடந்த சிலநாட்களுக்கு முன்பு மதுரை சிறையில் அடைக்கப்பட்ட திருச்சியைச் சேர்ந்த ஜெகன் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் தரப்புக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று உணவு இடைவேளையின்போது இருதரப்புக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், தன் மீது சிறைக்குள் தாக்குதல் நடத்த சுபாஷ் சந்திரபோஸ், ஜெகன் தரப்பு கைதிகள் திட்டமிடுவதாக சிறை கண்காணிப்பாளரிடம் ஆதிநாராயணன் புகார் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, நேற்று காலை விசாரணை நடத்த ஜெகனை சிறைக் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் அவரது அறைக்குஅழைத்துள்ளார். இதை அறிந்த சுபாஷ்சந்திரபோஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் புதுஜெயில் மெயின் ரோடு பகுதி சிறை கட்டிடச் சுவரில் ஏறி சிறை நிர்வாகம், ஆதி நாராயணனுக்கு எதிராக கோஷமிட்டபடி ஓடு, பாட்டில், செங்கற்களை எடுத்து சாலையில் சென்றவர்கள் மீது வீசி எறிந்தனர். மேலும் சிலர் தங்கள் உடலில் பிளேடால் கீறி காயம் ஏற்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த கரிமேடு போலீஸார், சிறை காவலர்கள் ரகளையில் ஈடுபட்ட கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கீழே இறங்கச் செய்துசிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால் புது ஜெயில் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. இதையடுத்து சிறையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT