Published : 30 Dec 2021 08:58 AM
Last Updated : 30 Dec 2021 08:58 AM
கோவை-பாலக்காடு வழித்தடத்தில் வாளையாறு-மதுக்கரை இடையே ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரு ரயில் பாதைகள் உள்ளன. தினந்தோறும் இந்த வழித்தடத்தில் 70-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதில், வனப்பகுதிக்குள் சுமார் 2 கி.மீ தூரம் ‘ஏ’ லைனும், 3 கி.மீதூரம் ‘பி’ லைனும் அமைக்கப் பட்டுள்ளன. இந்த ரயில் பாதை களில் கடந்த 2016-ல் இருந்து தற்போதுவரை 12 யானைகள் ரயில் மோதி இறந்துள்ளன. இதில், கோவை நவக்கரை பகுதியில் ரயில் மோதி கர்ப்பிணி யானை உட்பட மூன்று யானைகள் கடந்த நவம்பர் 26-ம் தேதி உயிரிழந்தன. இதையடுத்து, மதுக்கரை-வாளையாறு வழித்தடத்தில் யானைகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க ரயில்வே, வனத்துறையினர் இணைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், ரயில் மோதி யானைகள் உயிரிழப்பை தவிர்க்க எந்தெந்த இடத்தில் கண்காணிப்பு கோபுரங்களை அமைப்பது, கேமராக்களை பொருத்துவது என்பது குறித்து மாவட்ட வனத்துறை சார்பில் கள ஆய்வு செய்யப்பட்டு, ரூ.3 கோடிக்கு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது: பிரச்சினைக்குரிய இரு ரயில் வழித்தடங்களின் அருகே யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 6 இடங் களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. அங்கு கேமராக்களை பொருத்த திட்டமிடப் பட்டுள்ளது. இந்த கேமராக்கள் மூலம் இரவு நேரத்திலும் யானைகளின் நடமாட்டத்தை நேரலையாக தெரிந்துகொள்ள முடியும். அந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள், வனத்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும். இதுதவிர, ‘டிரோன்’ கேமராக்களை வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் பாதை அருகே யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க கூடுதலாக தண்டவாள கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ரயில்கள் எவ்வளவு வேகத்தில் செல்கின்றன என்பதை வனத்துறையினர் தற்போது தெரிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே, அந்தப் பகுதியில் அனுமதிக்கப்பட்ட வேகத்தில்தான் ரயில்கள் இயக்கப்படுகின்றனவா என்பதை கண்டறிய ஏ, பி ஆகியஇரு ரயில் பாதைகளின் அருகே‘ஸ்பீடு கன்’ பொருத்த திட்டமிடப்பட் டுள்ளது. இதில், ரயில்களின் வேகம் பதிவு செய்யப்படும். அந்த பதிவை யாரும் மாற்றியமைக்க முடியாது. இந்த ‘ஸ்பீடு கன்’ இந்திய சந்தையில் இல்லை. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இந்த அனைத்து திட்டங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.3 கோடிக்கு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் பரிசீலனையில் இந்த அறிக்கை உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT