Published : 05 Jun 2014 09:13 AM
Last Updated : 05 Jun 2014 09:13 AM
வருவாய் கோட்டாட்சியருக்கு நீதித்துறை மாஜிஸ்திரேட்டுக்கான அதிகாரம் வழங்கும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை அளித் துள்ளது.
திருத்தணியை அடுத்த தெக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த சி.கஜேந்திரன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:
நான், பழங்குடி இன இருளர் பிரிவைச் சேர்ந்தவன். கீழம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு அரிசி ஆலை உரிமையாளர்களிடம் எனது மாமனார் வாங்கிய கடனுக் காக என்னையும் எனது குடும்பத் தினரையும், அந்த ஆலையில் கொத்தடிமைகளாக அடைத்து வைத்திருந்தனர். 1990 முதல் 2005-ம் ஆண்டு வரை 15 ஆண்டு கள் கொத்தடிமையாக வேலை செய்தேன். விடுமுறையோ ஓய்வோ கிடையாது. ஆலை வளாகத்தை விட்டு வெளியே செல்ல எங்களுக்கு அனுமதி இல்லை. உறவினர்கள் வீட்டு திருமணம், துக்க நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள் என எந்த நிகழ்ச்சிக்கும் செல்ல முடியாது. நாளொன்றுக்கு ரூ.7 முதல் ரூ.10 வரை மட்டுமே கூலியாக தந்தனர்.
இந்நிலையில், 2005-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி அரிசி ஆலையில் சோதனை நடத்திய திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், எங்களை அங்கிருந்து மீட்டனர். பின்னர் நாங்கள் விடுவிக்கப்பட்டு எங்கள் சொந்த கிராமத்தில் குடியமர்த்தப்பட்டோம்.
இந்த விவகாரம் தொடர்பாக செவ்வாப்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு நிர்வாக மாஜிஸ்திரேட்டான திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியரிடம் இந்த வழக்கு விசாரணைக்காக சென்றது. 2006-ம் ஆண்டிலிருந்து வருவாய் கோட்டாட்சியர் முன்பு இந்த வழக்கு இன்னமும் தொடக்க நிலையிலேயே உள்ளது.
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின்படி, கடந்த 17.7.1987-ல் தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டது. அதன்படி, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக நிர்வாக மாஜிஸ் திரேட்டான வருவாய் கோட்டாட் சியருக்கு நீதித்துறை மாஜிஸ்திரேட் டுக்கு இணையான அதிகாரம் வழங்கப்பட்டது.
அரசு அதிகாரியான வருவாய் கோட்டாட்சியரால் நீதித்துறை நடுவரைப்போல சுதந்திரமாக வழக்குகளில் விசாரணை நடத்த இயலாது. நீதித்துறையும், நிர்வா கத்துறையும் தனித்தனியாக செயல்பட வேண்டும் என்பதை ஏற்கெனவே பல நீதிமன்ற தீர்ப்புகள் சுட்டிக் காட்டியுள்ளன. நீதித்துறை மாஜிஸ்திரேட்டுக்கு இணையான அதிகாரத்தை நிர்வாக மாஜிஸ்திரேட்டுக்கு வழங்கும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு செல்லாது என ஏற்கெனவே மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
எனவே, தமிழகத்தில் நீதித் துறை மாஜிஸ்திரேட்டுக்கு இணையான அதிகாரம் வருவாய் கோட்டாட்சியருக்கு வழங்கியுள்ள 21-வது பிரிவை செல்லாது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கஜேந்திரன் கோரியிருந்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.சத்யநாராயணன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாக இருப்பதாக ஏற்கெனவே மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
அதன் அடிப்படையில் 21-வது பிரிவு செல்லாது என அறிவிக்கிறோம். இந்த சட்டப் பிரிவின் அடிப்படையில் 1987-ம் ஆண்டு மாநில அரசு பிறப்பித்த அரசாணையும் செல்லாது என்பதால், அது ரத்து செய்யப்ப டுகிறது. திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் முன்பு உள்ள இந்த விவகாரம் தொடர்பான வழக்கை சம்பந்தப்பட்ட நீதித் துறை மாஜிஸ்திரேட்டுக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT