Published : 30 Dec 2021 07:55 AM
Last Updated : 30 Dec 2021 07:55 AM
பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வு ஏற்பட்டுள்ளதால், சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது புதிய பாதை திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அடுத்த முக்கிய ரயில் நிலையமாக எழும்பூர் இருந்து வருகிறது. சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போக்குவரத்து தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், பிற மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களும் சென்னை எழும்பூருக்கும், தாம்பரம் முனையம் போன்ற பிற இடங்களுக்கும் இயக்கப்படுகின்றன.
சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே தற்போது 2 பாதையில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. போதிய தண்டவாள வசதி இல்லாமல், ரயில் போக்குவரத்தை சீராக இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. எனவே, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே ரூ.300 கோடியில் 4-வது புதிய பாதைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதற்கான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், சில பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால், இந்த திட்டப்பணியை விரைவில் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டுள்ளதால், இந்த திட்டத்தில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்ட உயர் அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலங்களின் ரயில்கள் சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் வழியாகச் செல்ல புதிய பாதை அமைக்க வேண்டும். மற்ற திட்டங்களைக் காட்டிலும் இந்தத் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து ரயில்வே செயல்பட்டு வருகிறது. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே மொத்தமுள்ள 4.3 கிலோ மீட்டர் புதிய ரயில் பாதை திட்டத்தில், சுமார் 2 ஆயிரம் சதுர மீட்டர் மத்திய பாதுகாப்பு துறைக்கு கீழ் வருவதால், இந்த நிலத்தை கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. கரோனா பேரிடர் காலத்தில் இதற்கான பேச்சுவார்த்தையும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
இதற்கிடையே, சமீபத்தில் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன், ரயில்வே அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், இந்த திட்டத்துக்கு அவசியமான இடத்தை மட்டுமே தருவதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதனால், இந்த திட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான 2.5 மீட்டர் இடமும் இந்த திட்டத்துக்கு தேவைப்படுவதால், ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT