Published : 30 Dec 2021 08:46 AM
Last Updated : 30 Dec 2021 08:46 AM

தமிழகத்திலும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும்: புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் விருப்பம்

மதுரையில் பாஜக சார்பில் நடந்த நல்லாட்சி தின சிறப்புக் கருத்தரங்கில் பேசிய புதுச்சேரி அமைச்சம் நமச்சிவாயம். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

புதுச்சேரியைப் போல தமிழகத்திலும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை ஒட்டி மதுரை மாநகர் பாஜக சார்பில் நல்லாட்சி நாள் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதற்கு மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். ஓபிசி அணி மாவட்டத் தலைவர் மோகன்குமார் வரவேற்றார். பொதுச் செயலர் னிவாசன், மாவட்ட பார்வையாளர் கதலி நரசிங்கப்பெருமாள் ஆகியோர் பேசினர்.

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசியதாவது:

காசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்றுக் கொடுப்ப தற்காக பாரதியார் பெயரில் இருக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அங்குள்ள எந்த கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இதேபோல் தமிழக பல்கலைக்கழகத்தில் கவி காளிதாஸ் இருக்கை ஏற்படுத்தி சம்ஸ்கிருதம் கற்றுக்கொடுப்பார்களா? பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் திருக்குறள் கற்பிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் முயற்சியால் புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

அடுத்த தேர்தலில் புதுச்சேரியில் பாஜக தனித்து ஆட்சியமைக்கும். பாஜக ஆட்சி புதுச்சேரியுடன் நின்று விடாமல் தமிழகத்திலும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்றார்.

கருத்தரங்கில் மாநில அரசு தொடர்புப் பிரிவுச் செயலர் ராஜ ரத்தினம், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் சசிராமன், சீனிவாசன், மாவட்ட துணைத் தலைவர் ஹரிகரன், ஊடகப் பிரிவுச் செயலர் ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x