Last Updated : 03 Mar, 2016 04:16 PM

 

Published : 03 Mar 2016 04:16 PM
Last Updated : 03 Mar 2016 04:16 PM

அதிமுக, திமுகவால் வாரி வழங்கப்படும் இலவசங்கள்: கட்சியினரை குஷிப்படுத்த கமகமக்கிறது பிரியாணி விருந்து

இலவசங்கள் மீது மக்களுக்கு இருக்கும் ஈர்ப்பை சாதகமாகக் கொண்டு அதிமுக, திமுக நடத்தும் பொதுக் கூட்டங்களில் நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் குடங்கள், சேலைகள், தையல் இயந்திரங்கள் என, இலவச பொருட்கள் வாரி வழங்கப்படுகின்றன. கட்சி கூட்டங்களில் பிரியாணி வாசம் கமகமக்கிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டங்களில் பிரியாணி விருந்து களைகட்டியது.

அதிமுகவினர் தீவிரம்

சங்கரன்கோவிலில் அதிமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற பெண்களுக்கு பிரியாணி விருந்து தயாராக இருப்பதாக மேடையிலேயே மாநிலங்களவை உறுப்பினர் விஜிலாசத்தியானந்த் அறிவித்தார். சட்டப்பேரவை தேர்தலை கருத்தில்கொண்டு கட்சியினரை உற்சாகப்படுத்தும் நோக்கில் இந்த பிரியாணி விருந்துக்கு நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

தையல் இயந்திரம்

இதுபோல் திருநெல்வேலி, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டங்களிலும் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு தையல் இயந்திரங்களை நிர்வாகிகள் வழங்கினர். ஏற்கெனவே கடந்த 3 மாதமாகவே இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்குவதில் அதிமுக நிர்வாகிகள் அக்கறை செலுத்தியிருந்தனர். ஒவ்வொரு பகுதிக்கும் சென்று இலவச பொருட்கள் விநியோகத்தை இவர் களே தொடங்கியும் வைத்தனர்.

ஸ்டாலின் பிறந்த நாள்

அதிமுகவினருக்கு போட்டியாக தற்போது திமுக நிர்வாகிகள் அக்கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் பெண்களுக்கு குடங்கள், சேலைகள், தையல் இயந்திரங்களை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 264 சில்வர் குடங்களும், 4 தையல் இயந்திரங்களும், 4 சைக்கிள்களும் வழங்கப்பட்டன.

விழாவுக்கு திருநெல்வேலி மாநகர் மாவட்ட திமுக செயலாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் தலைமை வகித்தார். தீப்பொறி ஆறுமுகம் பேசினார். டி.பி.எம். மைதீன்கான் எம்.எல்.ஏ., திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் மு.அப்துல்வகாப், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வாக்குகளாக மாறுமா?

இதுபோல் திருநெல்வேலி பேட்டை மல்லிமால் தெருவில் நடைபெற்ற மு.க.ஸ்டாலின் பிறந்த தினவிழாவில் 664 பெண்களுக்கு தலா ரூ.350 மதிப்பிலான புடவைகளை மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல்வகாப் வழங்கினார். நூற்றுக் கணக்கானோருக்கு வேட்டிகளும் வழங்கப்பட்டன. விழாவில் பங்கேற்றவர்களுக்கு பிரியாணி விருந்தும் படைக்கப்பட்டது.

நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் குறிப்பாக பெண்களுக்கு குடங்கள், சேலைகள் உள்ளிட்ட பொருட்களை அதிமுகவும், திமுகவும் மாறிமாறி வழங்கி கொண்டிருக்கும் காட்சிகளை திருநெல்வேலி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் காணமுடிகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்முன் இவற்றை வழங்கி முடிக்க இந்த இரு கட்சியினரும் மும்முரமாக களமிறங்கியிருக்கிறார்கள்.

வாக்குவங்கியை குறிவைத்தே இத்தகைய செயல்பாடுகளில் இரு கட்சிகளும் இறங்கியிருப்பது தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x