Published : 29 Dec 2021 05:50 PM
Last Updated : 29 Dec 2021 05:50 PM
மதுரை: ''திருமணத்தின்போது பெண்களுக்கு சீர் செய்வதைக் குறைக்க வேண்டும்'' என்று சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை கே.கே.நகரில் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் தென்மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் எஸ்.வளர்மதி, ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன், மதுரை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் பூமிநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அமைச்சர் பி.கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''கன்னியாகுமரியில் இருந்து மதுரை வரை உள்ள 19 தென் மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் இல்லங்கள் அனைத்தையும் இந்த அலுவலகம் தன்னுடைய நேரடிப் பார்வை மூலம் கண்காணிக்கப்படும். குழந்தைகள் சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையாக இருந்தாலும் இந்த அலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கல்வித்துறையுடன் இணைந்து பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வை இந்த அலுவலகத்தின் பள்ளிகளில் ஏற்படுத்துவார்கள்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்குத் தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உள்ள தண்டனைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். இந்த அளவுக்குக் கடுமையான தண்டனை இருப்பது பலருக்குத் தெரியவில்லை. அதனாலே, அவர் இந்தக் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.
பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமைகள் தொடர்பாக தினமும் ஒரு நடவடிக்கை தற்போது எடுக்கப்படுகிறது. அதற்காக இந்தக் குற்றங்கள் தற்போது அதிகரித்துவிட்டதாகக் கருத முடியாது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்படாமல் இருந்தன. தற்போது இந்த ஆட்சியில்தான் குற்றங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
உசிலம்பட்டி போன்ற பகுதியில் கடந்த காலத்தில் நடந்த பெண் சிசுக் கொலைகள் உலக அளவில் அறியப்பட்டது. தற்போது அதுபோன்ற குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன. சீர் செய்ய வேண்டும் என்பதற்காகவே பெண் சிசுக் கொலை நடக்கலாம். அதனால், திருமணத்தின்போது பெண்களுக்கு சீர் செய்வதைக் குறைக்க வேண்டும். பெண் குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். ஆண், பெண் குழந்தைகள் இரண்டு பேரும்தான் பெற்றோரைப் பார்க்கும். அதனால், இந்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் செல்ல உள்ளோம்''.
இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT