Published : 29 Dec 2021 11:15 AM
Last Updated : 29 Dec 2021 11:15 AM
சென்னை: தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானதால் மொத்தம் 45 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று காலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
நாடு முழுவதுமே கரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னையிலும் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று சென்னையில் 194 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், சென்னை அசோக் நகர், எல்.ஜி.ஜி.எஸ் காலனி 19வது தெருவில் உள்ள இரண்டு வீட்டில் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதி தனிமைபடுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மக்கள் அனைவருமே முகக்கவசம் அணியவும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில் ஒமைக்ரான் பாதித்த 45 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அனைவருமே அறிகுறிகள் அற்ற பாதிப்புடன் உள்ளனர். இவர்களைத் தவிர 120 பேருக்கு எஸ் ஜீன் குறைபாடு கண்டறியப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வேகமாகப் பரவும் ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 15 முதல்18 வயது வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வரும் 3ஆம் தேதி சென்னை போரூர் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். மேலும், மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை அசோக் நகரில் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் அமைச்சர், சுகாதாரச் செயலர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
புத்தாண்டு கொண்டாட்டம் வேண்டாம்:
முன்னதாக அமைச்சர் புத்தாண்டு கொண்டாட்டம் பற்றி கூறுகையில், "தமிழகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தனியார் விடுதி நிர்வாகங்கள் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கான எந்த ஒரு விளம்பரமும் இதுவரை வெளியிடவில்லை. எங்களுடைய அறிவுறுத்தல்களை, கட்டளையாக ஏற்று அவர்கள் செயல்படுவார்கள் என நம்பிக்கை இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT