Last Updated : 20 Mar, 2016 03:13 PM

1  

Published : 20 Mar 2016 03:13 PM
Last Updated : 20 Mar 2016 03:13 PM

கோவையில் சிட்டுக் குருவிக்கு ஒரு குட்டி வீடு: ஒரு தொழிலாளியின் ‘பறவைக் காதல்’

வீட்டு முற்றங்களை ‘செல்ல சிணுங்கல்களால்’ அலங்கரிப்பவை சிட்டுக் குருவிகள். தானியங்களைத் தேடி வந்து, வீட்டிலேயே தஞ்சமடைந்து நம்மில் ஒருவராக வாழும் இக்குருவிகள், இன்று எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன. இதற்கு செல்போன் கோபுரக் கதிர்வீச்சு, இயற்கை மாசு பாடு எனப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், சிட்டுக்குருவிகள் எண்ணிக்கையில் மட்டுமே குறைந்துள்ளன. அவை அழியவும் இல்லை; அழிவின் விளிம் பிலும் இல்லை எனக் கூறி நம்பிக் கையளிக்கிறார் கோவையைச் சேர்ந்த பி.பாண்டியராஜன்.

லேத் ஒர்க்‌ஷாப் தொழிலாளியான இவருக்கு, சிட்டுக்குருவி பாதுகாவலர், சிட்டுக்குருவி ஆய்வாளர் என சில வேறு முகங்களும் உண்டு. அதுமட்டுமின்றி, சொந்தச் செலவில் சிட்டுக்குருவிகளுக்கு கூண்டுகள் அமைத்து பாதுகாப்பான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி வருகிறார் இவர்.

மனிதர்களை அண்டி வாழும் சிட்டுக்குருவிகளுக்கு மிகப்பெரிய பிரச்சினை வாழ்விடங்கள் தான். அவற்றை ஏற்படுத்திக் கொடுத்தால், விரைவிலேயே அவற்றின் செல்லச் சிணுங்கல்கள் அனைத்து வீடுகளிலும் கேட்கும் என்பது இவரது நம்பிக்கையாக இருக்கிறது.

கோவை அருகே உள்ள போத்தனூரில் குடும்பத்துடன் வசிக்கும் பி.பாண்டியராஜன், தனது லேத் ஒர்க்‌ஷாப்பில் பணிபுரியும் இளைஞர்களுடன் இணைந்து, சிட்டுக்குருவிகள் பாதுகாப்புப் பணியை தீவிரமாக நடத்தி வருகிறார்.

அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: சிறுவயதிலிருந்தே சுற்றுச்சூழல் மீது ஆர்வம் இருந்தது. அதன் அடுத்தகட்டம்தான் சிட்டுக்குருவி பாதுகாப்பு மீதான ஈடுபாடு. ஷட்டர் கதவுகளில் தான் அவை பெரும்பாலும் கூடு கட்டும். அப்போது எதிர்பாராதவிதமாக கதவுகளில் சிக்கி இறந்துவிடும். அந்த விபத்துகளைத் தவிர்க்க என்ன செய்யலாம் என யோசித்தது, இன்று எங்கள் நோக்கமாகிவிட்டது.

மஹாராஷ்டிராவில் உள்ள முகமதுசாலிவர் என்பவர் வாழ்விடம் ஏற்படுத்திக் கொடுத்து 2 லட்சம் குருவிகளை பாதுகாத்துள்ளார் என்பது தெரிந்ததும், அதேபோல நாமும் ஏன் செய்யக்கூடாது என முயற்சித்தோம். என்னுடன் பணியாற்றும் நண்பர்கள் 15 பேர் இணைந்து, முதலில் குருவிகள் இருக்குமிடத்தை அறிந்து அட்டைப்பெட்டிகள் வைத்தோம். குருவிகள் தேடி வரத் தொடங்கின. ஆனால் கூடுகள் நிலைக்கவில்லை. எனவே மரக்கூண்டுகளை தயாரித்து வைத்தோம். நல்ல முடிவு கிடைத்தது.

இதுதான் எங்கள் பணியின் ஆரம்பம். ஒவ்வொரு ஞாயிறன்றும், நாங்கள் குழுவாகச் சென்று, சிட்டுக்குருவிகள் இருக்குமிடத்தையும், எண்ணிக்கையையும் தெரிந்து கொள்வோம். அதன் பின்னர் அங்கு அனுமதி பெற்று, மரக்கூண்டுகளை வைப்போம். நாளடைவில் குருவிகள் நிரந்தரமாக அதில் வாழத் தொடங்கி விட்டன. போத்தனூர், குனியமுத்தூர் பகுதிகளில் சுமார் 2000 குருவிகளுக்கு கூண்டு வைத்து பாதுகாத்துள்ளோம். அவற்றின் எண்ணிக்கையும் பெருகியுள்ளது என்கிறார் நம்பிக்கையுடன்.

மேலும் அவர் கூறும்போது, ‘புறச்சூழல் பாதிப்பில்லாமல் இருந் தால் 13 ஆண்டுகளுக்கு சிட்டுக் குருவிகள் வாழும். அதிக கதிர் வீச்சுள்ள ரேடியோ கதிர்களையே அவை தாங்கிக் கொள்ளும்போது, செல்போன் கோபுர கதிர்வீச்சுக்கள் என்ன செய்துவிடும்? எனவே செல்போன் கோபுரங்களால் சிட்டுக் குருவி அழிகிறது என்பது உண்மை யல்ல. வாழ்விடப் பிரச்சினை மட்டுமே எண்ணிக்கையில் அவை குறையக் காரணம். மற்ற பறவைகளைப் போல அவற்றால் மரத்தில் கூடுகட்டத் தெரியாது. மாறாக மனிதர்களையே அவை சார்ந்திருக்கும்’ என்கிறார்.

நமது பண்பாட்டு அடையாளமாக இருந்து வரும் சிட்டுக்குருவிக்கு, நாமும் ஒரு வாழ்விடம் அமைத்துக் கொடுப்போமானால், அந்தச் செல்ல சிணுங்கல்கள், தலைமுறை கடந்தும் நம் வீடுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x