Published : 29 Dec 2021 06:31 AM
Last Updated : 29 Dec 2021 06:31 AM
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள பெரியகட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முத்துப்பாண்டி. இவரது மனைவி கவுசல்யா. இந்தத் தம்பதியருக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ளன. மீண்டும் கருவுற்ற கவுசல்யா, பிரசவத்துக்காக சேடபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டிச.21-ல் 3-வதாக பெண் குழந்தை பிறந்தது.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், டிச.26-ம் தேதி குழந்தை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஆனால், குழந்தையின் இறப்பில் சந்தேகம் எழுந்ததையொட்டி, பெரியகட்டளை கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி, சேடபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், முத்துப்பாண்டியைத் தேடி அவரது வீட்டுக்குச் சென்றபோது வீடு பூட்டியிருந்தது. குடும்பத்துடன் முனியாண்டி தலைமறைவானதும் தெரியவந்தது.
மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் நெல், கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசுவை பெற்றோரே கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து சேடபட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வட்டாட்சியர் அனுமதியுடன் சிசுவின் உடலைத் தோண்டி எடுத்து, பிரேதப் பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் உசிலம்பட்டி பகுதியில் மீண்டும் சிசுக் கொலை தலை தூக்குகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT