Published : 29 Dec 2021 06:35 AM
Last Updated : 29 Dec 2021 06:35 AM
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்ததாக திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 அதிமுக நிர்வாகிகளை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல பேரிடம் சுமார் ரூ.3 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரை கைது செய்யும் நடவடிக்கையை போலீஸார் துரிதப்படுத்தினர். இதையறிந்த ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.
இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அவரை தேடி வருகின்றனர். ஆனால், தனிப்படை போலீஸாரிடம் சிக்காமல் கடந்த 10 நாட்களுக்கு மேலாக ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ளார்.
இதைத் தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜியுடன் நெருக்கமானவர்களிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போன் எண்களை கொண்டு அவர் யாரிடம் எல்லாம் பேசி வருகிறார் என்ற தகவல்களை சேரிகத்த தனிப்படை போலீஸார் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில், திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கோடியூரைச் சேர்ந்த அதிமுக இளைஞர் பாசறை நகரச் செயலாளர் ஏழுமலை(35) மற்றும் திருப்பத்தூர் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலர் விக்னேஸ்வரன்(36). ஆகிய இருவரையும் திருப்பத்தூர் டிஎஸ்பி சாந்தலிங்கம் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று அதிகாலை கைது செய்து விசாரணைக்காக நெல்லைக்கு அழைத்துச் சென்றனர்.
ராஜேந்திர பாலாஜியுடன் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சில அதிமுக நிர்வாகிகள் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக கண்டறியப்பட்டதன்பேரில் தனிப்படை போலீஸார் 2 பேரை கைது செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் செல்போன் எண் மற்றும் அவரது உதவியாளர்கள் எண்களில் ராஜேந்திர பாலாஜி அவ்வப்போது பேசி வருவதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் தனிப்படை போலீஸார் கே.சி.வீரமணியின் செல்போன் எண்களையும் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரூ.21 லட்சம் மோசடி
விருதுநகர் மாவட்ட காவல்துறையில் கடந்த 3 நாட்களுக்குமுன்பு 7 புகார்கள் அளிக்கப்பட்டன. அதில், அரசு துறைகளில் வேலைவாங்கித் தருவதாக ராஜேந்திர பாலாஜி, அவரது கூட்டாளிகள் ரூ.73.66 லட்சம் வரை மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கும்பகோணத்தைச் சேர்ந்த இருவர் தங்களுக்குமின் துறையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி ராஜேந்திர பாலாஜிக்கு அதிமுக ஒன்றியச் செயலர் விஜய நல்லதம்பி மூலம் ரூ.21 லட்சம் கொடுத்ததாக இணையம் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகருக்கு நேற்று புகார் அனுப்பிஉள்ளனர். இதுகுறித்து விசாரிக்க மாவட்ட குற்றப் பிரிவுக்கு எஸ்பி மனோகர் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment