Published : 29 Dec 2021 07:47 AM
Last Updated : 29 Dec 2021 07:47 AM
கலப்பு தீவனத்துக்கு ஆவின் நிறுவனம் வழங்கி வந்த மானியத் தொகை நிறுத்தப்பட்டுள்ளதால் கால்நடை வளர்ப்போர் அதிருப்தியடைந்துள்ளனர். கலப்பு தீவனத்துக்கு 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும், என பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 25 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் எனும் பெயரில் நேரடியாக பால் மற்றும் தயிர், மோர், வெண்ணை உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்டபொருட்களாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் ஆவினுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு கலப்பு தீவனத்துக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.2 வீதம் மானியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. இது கறவை மாடு வளர்ப்போருக்கு பெரும் உதவியாக இருந்து வந்தது. இந்நிலையில் இம்மானியத் தொகையை ஆவின் நிறுவனம் திடீரென நிறுத்தியுள்ளது. இது கறவை மாடு வளர்ப்போர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் எம்.ஜி. ராஜேந்திரன் கூறியதாவது:
ஆவின் நிறுவனம் தங்களிடம் பால் வழங்கும் கால்நடை வளர்ப்போருக்கு கலப்புதீவனம் வழங்குகிறது. இந்த கலப்பு தீவனத்துக்கு கிலோவுக்கு ரூ.2 வீதம் மானியம் வழங்குகிறது. லாபத்தில் இயங்கும்போது இந்த மானியம் வழங்குகிறது. தமிழகத்தில் தற்போது 25 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் பெரும்பாலானவை நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, கலப்பு தீவனத்துக் கான மானியம் வழங்கப்படாமல் உள்ளது. அதேவேளையில் பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதி கலப்புத் தீவனத்துக்கு 50 சதவீதம் மானியத் தொகையை அரசு வழங்க வேண்டும். அவ்வாறு அரசு வழங்கினால் ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கினாலும் விவசாயிகளுக்கான மானியத் தொகை வழங்குவது தடைபடாது, என்றார்.
இதுகுறித்து நாமக்கல் ஆவின் நிறுவன பொதுமேலாளர் பி.பார்த்தசாரதி கூறுகையில், ஆவின் நிறுவனம் லாபத்தில் இயங்கும்போது மட்டுமே கலப்பு தீவனத்திற்கு மானியம் வழங்கப்படும். எனவே, தற்போது கலப்புத் தீவனத்திற்கான மானியம் வழங்கப்படவில்லை, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT