Last Updated : 29 Dec, 2021 07:36 AM

 

Published : 29 Dec 2021 07:36 AM
Last Updated : 29 Dec 2021 07:36 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளப் பகுதிகளில் கூட்டமாக குவிந்துள்ள பூநாரை பறவைகள்: இடையூறு ஏற்படாமல் இருக்க வனத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் உள்ள உப்பளங்களில் கூட்டம், கூட்டமாக குவிந்துள்ள பூநாரை பறவைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இவற்றை மக்கள் ஆர்வமுடன் ரசித்து செல்கின்றனர்.

தமிழில் பூநாரை என்று அழைக்கப்படும் கிரேட்டர் பிளம்மிங்கோ பறவைகள் இளஞ்சிவப்பு நிறத்தில் அழகாக காட்சியளிக்கும். ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பூநாரை பறவைகள் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளுக்கு வலசை வருகின்றன.

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு பூநாரை பறவைகள் வருவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. பருவமழைக்கு முந்தைய காலம், பருவமழைக் காலம் மற்றும் பருவமழைக்கு பிந்தைய காலம் ஆகிய மூன்று காலங்களில் கடந்த சில ஆண்டுகளாக இப்பறவைகள் தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு வருவதை பறவை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மன்னார் வளைகுடா கடலை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள உப்பளங்கள், உவர்நீர் ஓடை, உவர்நீர் குட்டை, உவர்நீர் குளம், கழிமுகப் பகுதிகள், சதுப்புநிலக் காடுகள் போன்றவை பூநாரை பறவைகளை கவர்ந்திழுக்கும் இடங்களாகும்.

ஆண்டு தோறும் அதிகரிப்பு

பூநாரை பறவைகளின் உணவான நண்டு, இறால், நத்தை, புழுக்கள், பூச்சிகள், கடற்புற்கள், தாவரங்கள், அழுகிய இலைகள், தண்டுகள் போன்றவை இப்பகுதியில் அதிகம் இருப்பதாலும், ஏற்புடைய சூழல் காணப்படுவதாலும் அவை இங்கு வருவதாக பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மாவட்டத்தில் பழையகாயல், புன்னக்காயல் சதுப்பு நிலக்காடுகள், வேம்பார், வேப்பலோடை, குளத்தூர், பனையூர், தூத்துக்குடி பகுதியில் உள்ள உப்பளங்கள், உவர்நீர் குட்டைகள், ஏரிகள் மற்றும் தூத்துக்குடி பகுதியில் உள்ள கழிமுக பகுதிகளில் பூநாரை பறவைகளை கூட்டம் கூட்டமாக காண முடிகிறது. 100 முதல் 1,000 எண்ணங்கள் கொண்ட கூட்டமாக இவை காணப்படுகின்றன.

உப்பளப் பகுதிகளில் கூட்டம், கூட்டமாக காணப்படும் பூநாரை பறவைகள் கண்களுக்கு விருந்துபடைக்கும் வகையில் அழகாக காட்சியளிக்கின்றன. இவற்றை மக்கள் ஆர்வமாக பார்க்கின்றனர். குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை, தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலை, துறைமுக சாலை போன்ற பகுதிகளில் உள்ள உப்பளங்கள், உவர்நீர் குட்டைகளில் காணப்படும் பூநாரை பறவைகளை மக்கள் வெகுவாக ரசித்து செல்கின்றனர். பலர் செல்போன்களில் புகைப்படம் எடுப்பதையும் பார்க்க முடிகிறது.

தீவிர கண்காணிப்பு

இது குறித்து மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக வனச்சரக அலுவலர் ரகுவரன் கூறியதாவது: மன்னார் வளைகுடா கடற்கரை பகுதிகளில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான எண்ணிக்கையில் பூநாரை பறவைகள் காணப்படுகின்றன. ரோச் பூங்காவுக்கு எதிரே உள்ள உப்பளப் பகுதிகளில் இந்த ஆண்டு தான் முதல் முறையாக பூநாரை பறவைகளை பார்க்கிறோம்.

இனப்பெருக்க காலத்துக்காக இவை இங்கே வருகின்றன. 3 முதல் 4 மாதங்கள் இங்கிருந்துவிட்டு திரும்பிச் சென்றுவிடும். ஜனவரி மாதம் நீர்நிலை பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும். அப்போது பூநாரை மட்டுமின்றி மற்ற பறவைகள் குறித்த விவரங்களும் தெரியவரும்.

பூநாரை பறவைகளுக்கு மனிதர்களாலும், நாய் போன்ற மற்ற விலங்குகளாலும் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அவை காணப்படும் இடங்களை வேட்டைத்தடுப்பு காவலர்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

மேலும், இப்பறவைகள் பெரும்பாலும் மத்திய உப்பு துறைக்கு சொந்தமான இடங்களில் தான் காணப்படுகின்றன. எனவே, இவற்றுக்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்படி மத்திய உப்புத் துறைக்கு மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் சார்பில் கடிதம் எழுதியுள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x