Published : 28 Dec 2021 10:23 PM
Last Updated : 28 Dec 2021 10:23 PM
சென்னை: 'சிறிய பணிதான் இது; பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட' என்று கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக பாதை அமைத்தது குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எத்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பார்கள். அந்தக் கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம்; விரைவில் நிரந்தரம் ஆக்குவோம்.சிறிய பணிதான் இது; பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட" என்று பதிவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள ஊனமுற்றோர் உரிமை இணையம் உள்ளிட்ட பல்வேறு மாற்றுத் திறனாளிகள் நல அமைப்புகள், சாதாரண குழந்தைகளைப்போல, மாற்றுத் திறனாளி குழந்தைகளும் கடல் அலையை ரசிக்கவும், அலையில் கால்களை நனைத்து மகிழவும் ஏற்பாடு செய்யுமாறு பல ஆண்டுகளாக மாநகராட்சியிடம் வலியுறுத்தி வந்தன.
இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன் கடற்கரை மரப் பலகைகளை மணல் பரப்பில் நிறுவி,அதன் வழியாக சக்கர நாற்காலிகளில் குழந்தைகளை அழைத்துச் சென்று, கடல் அலையை ரசிக்க வைத்தனர். இதற்காக பிரத்யேக சக்கர நாற்காலிகளையும் மாநகராட்சி அதிகாரிகள் வாங்கினர்.
வழக்கமாக டிசம்பர் முதல் வாரத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் மழை பெய்ததால், பள்ளிகளுக்கு விடுமுறை நாட்களாக உள்ளகடைசி வாரம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளி குழந்தைகள் ஜனவரி 2-ம் தேதி வரை இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்நிலையில், 'சிறிய பணிதான் இது; பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட' என்று முதல்வர் கூறியிருப்பது விரைவில் நிரந்தர பாதை அமைக்கப்படும் நம்பிக்கையைத் தருவதாக முதல்வரின் பேஸ்புக் பதிவு மற்றும் ட்வீட்டின் கீழ் மாற்றுத்திறனாளிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT