Published : 28 Dec 2021 05:39 PM
Last Updated : 28 Dec 2021 05:39 PM
கடலூர்: ‘ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பாக சிதம்பரம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி தொடர்ந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி மாதம் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நகரக் காவல் ஆய்வாளர் ஒரு மாதத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருந்ததாகக் கூறி வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி சிதம்பரம் ஜே.எம் 2 குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார்.
இது தொடர்பாக வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி ஏற்கெனவே நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலமும் அளித்திருந்தார். மேலும் பாமக மாவட்டச் செயலாளர் செல்வ மகேஷ் என்பவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு சிதம்பரம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (டிச.28) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை வரும் ஜனவரி மாதம் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட் சக்திவேல் உத்தரவிட்டார். மேலும் இந்த மனு தொடர்பாக சிதம்பரம் நகரக் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை நடத்தி ஒரு மாதத்தில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT