Published : 28 Dec 2021 05:35 PM
Last Updated : 28 Dec 2021 05:35 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே கழுமரம் வழிபாட்டில் உள்ளதால் இப்பகுதியில் சமணர்கள் கழுவேற்றிக் கொல்லப்பட்டனரா என்பது குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் இறையூரில் இருந்து முத்துக்காடு செல்லும் சாலையோரம் மகாவீரர் சமண சிற்பத்தை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முதுநிலை வரலாற்றுத் துறை மாணவர்கள் ச.மாரியம்மாள், சா.ரங்கராஜ் இரா.பிரியங்கா, ச.லோகேஸ்வரன் ஆகியோர் அண்மையில் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் இவ்விடத்தைப் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன் தலைமையில் உறுப்பினர்களான கருப்பையா, கவிஞர் மூட்டாம்பட்டி ராஜூ, ராஜாங்கம், இளங்கோ ஆகியோர் மேலாய்வு செய்தனர். அதில், கூடுதலாக கழுமரம், சதுர ஆவுடையுடன் கூடிய லிங்கம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
இதுகுறித்துப் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன் கூறியதாவது,
”பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சிற்பம் சமணத்தின் 24-வது தீர்த்தங்கரரான வர்த்தமானர் எனும் மகாவீரர் திருமேனியாகும். இச்சிற்பம், 89 செ.மீ. உயரமும், 54 செ.மீ. அகலத்துடனும் காணப்படுகிறது. மேலும், இச்சிற்பம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கு 100 மீட்டர் தொலைவில் நாட்டார் வழிபாட்டு காமாட்சி அம்மன் கோயில் உள்ளது.
அப்பகுதியில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லாலான 170 செ.மீ. உயரமுடைய கழுமரம் ஒன்றும் வழிபாட்டில் உள்ளது. அதனருகிலேயே பாண்டியர் கலைப் பாணியிலான சதுர வடிவ ஆவுடையுடன் கூடிய லிங்கம், நாயுடன் கூடிய பைரவர் சிற்பத்தின் உடைந்த பகுதி, முழுதும் சிதைந்த நந்தி, 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர், வீரபத்திரர் சிற்பம் உள்ளிட்டவையோடு கூடிய ஏழுகன்னியர் சிற்பங்கள், கற்கோயிலின் சிதலமடைந்த அடிமானமும் காணப்படுகிறது.
இறையூரில் வழிபாட்டிலுள்ள கழுமரமானது சமீப காலத்தையதாகும். ஏற்கெனவே இருந்த கழுமரம் அழிந்த பிறகு அதேபோன்று கல்லில் செய்து வழிபடுவதாகத் தெரிகிறது. பொதுவாக திருட்டு உள்ளிட்ட சமூகக் குற்றங்களில் ஈடுபடுவோரையும், எதிர் நாட்டவரையும் கழுவேற்றி தண்டனை வழங்கப்பட்டது குறித்தும், செவிவழிச் செய்திகளும் சில நாட்டார் பாடல்களின் மூலமும் அறிந்துகொள்ள முடிகிறது.
கழுவேற்ற விளக்கம்:
கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் எண்ணெய் தடவி கழுவேற்றப்படுபவரைப் பிடித்து, நிர்வாணமாக்கி, அவரை குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள்.
உடலின் எடையால், உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக உடலைத் துளைத்துக் கொண்டு மேலேறும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேற ஏற வலி தாங்காமல் இரவெல்லாம் கூப்பாடு போட்டு உயிரிழப்பார். கழுவிலேற்றப்பட்ட உடல் பறவைகளுக்கும், நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும்.
சமணர் கழுவேற்றப்பட்டது குறித்து பல்வேறு இலக்கியங்களில் சான்று பகிரப்படுகிறது.
"துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள் முன்னமே பிள்ளை யார்பாலநு சிதமுற்றச் செய்தார் கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க" எனும் பெரிய புராணப் பாடல் சமணர் கழுவேற்றம் குறித்துச் சொல்கிறது.
இதுகுறித்து ஒட்டக்கூத்தர் தனது தக்கயாகப்பரணி எனும் நூலில் குறிப்பிடுகிறார். திருவிளையாடற் புராணமும் இதைக் குறிப்பிடுகிறது. மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழ்வுகளில் இக்கழுவேற்றம் நடத்திக் காட்டப்படுகிறது.
ஆவுடையார்கோவிலிலுள்ள பிற்கால ஓவியம், கழுகுமலைக் கோயில் சுவரோவியங்கள், மதுரை மீனாட்சியம்மன் கோயில் சுவரோவியங்களில் சமணர் கழுவேற்றம் குறித்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.
ஆனால், சமண இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் இதுபற்றிய எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை. இந்நிலையில் சமண சிற்பமும் அதனருகே கழுமரமும், சிதைந்த சைவ கோயிலும் அருகருகே அமைந்துள்ளதால் சமணர்களைக் கழுவேற்றிய இடமாக இறையூர் இருந்ததா என்பது குறித்து தொடர் ஆய்வுகளுக்கு இந்தப் புதிய சான்றுகள் வழிவகை செய்கின்றன” என்றார்.
ஆய்வுப் பணியின் போது பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் பி.அனுபாரதி க.கனிமொழி, என்.ஸ்ரீதர், உள்ளூர் பொதுமக்கள் பூசாரி ரெங்கராசு, இறையூர் ரெங்கராசு, முருகன், முருகையா உள்ளிட்ட பொதுமக்கள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT