Published : 28 Dec 2021 01:43 PM
Last Updated : 28 Dec 2021 01:43 PM
திருப்பத்தூர்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்ததாக திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அதிமுக நிர்வாகிகளை நெல்லை மாவட்ட தனிப்படை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் பால்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல பேரிடம் சுமார் ரூ.3 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
அதனடிப்படையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்யும் நடவடிக்கையைக் காவல் துறையினர் துரிதப்படுத்தினர். இதையறிந்த ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.
இதைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். இதுவரை ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படவில்லை. இதைத் தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜியுடன் நெருக்கமானவர்களிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போன் எண்களைக் கொண்டு அவர் யாரிடம் பேசி வருகிறார் என்பதைக் கண்டறிந்து அவர்களிடம் தனிப்படை போலீஸார் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
அதனடிப்படையில், திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கோடியூரைச் சேர்ந்த அதிமுக இளைஞர் பாசறை நகரச் செயலாளர் ஏழுமலை (35) மற்றும் திருப்பத்துார் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் விக்கி (எ) விக்னேஸ்வரன் (36) ஆகிய இருவரையும் திருப்பத்துார் டிஎஸ்பி சாந்தலிங்கம் தலைமையிலான நெல்லை மாவட்ட தனிப்படை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்து விசாரணைக்காக நெல்லைக்கு அழைத்துச் சென்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளிடம் அடிக்கடி செல்போனில் தொடர்புகொண்டு பேசியதாகக் கண்டறியப்பட்டதின் பேரில் நெல்லை தனிப்படை போலீஸார் 2 பேரைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர் வீரமணியின் செல்போன் எண் மற்றும் அவரது உதவியாளர்கள் எண்களில் தனிப்படையால் தேடப்படும் ராஜேந்திர பாலாஜி அவ்வப்போது பேசி வருவதாகக் கூறப்படும் நிலையில், தனிப்படை போலீஸார் முன்னாள் அமைச்சர் வீரமணியின் செல்போன் எண்களையும் ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT