Published : 28 Dec 2021 09:03 AM
Last Updated : 28 Dec 2021 09:03 AM
திருவள்ளூர்: தமிழக அரசு, சென்னைக்கான நீடித்த நிலையான சுற்றுச்சூழல் கொள்கையை வகுக்க வேண்டும் என ஆவடி அருகே திருமுல்லைவாயலில் நேற்று நிறைவுபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது வடசென்னை மாவட்ட மாநாடு ஆவடி அருகே திருமுல்லைவாயலில் நேற்று முன்தினம் காலை தொடங்கி, நேற்று நிறைவுற்றது. மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங் ஆகியோர் பங்கேற்று, சிறப்புரை ஆற்றினர்.
மாநாட்டில் நேற்று சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். நகர்ப்புற ஏழைமக்களுக்கு ஆண்டுக்கு 200 நாள்வேலை உத்தரவாதத்தை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அரசுஉருவாக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இம்மாநாட்டில் தமிழக அரசு சென்னைக்கு நீடித்த நிலையான சுற்றுச்சூழல் கொள்கையை வகுக்க வேண்டும். மெட்ரோ ரயில் சேவையை வடசென்னை முழுவதையும் இணைக்கும் வகையில் விரிவுபடுத்த வேண்டும். சென்னை முதல் கும்மிடிப்பூண்டி வரை புறநகர் மின்சார ரயில்களுக்கென்று தனிப் பாதையை உருவாக்கி, கூடுதலாக ரயில்கள் இயக்கப்பட வேண்டும் போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
நூலகம், கலையரங்கம் வேண்டும்
அதுமட்டுமல்லாமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட மாநாட்டில், அண்ணா நூற்றாண்டு நூலகம் போல, வடசென்னையிலும் நூலகம் மற்றும் கலையரங்கம் அமைக்க வேண்டும். வடசென்னையில் இடிந்து விழும் நிலையில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளுக்கு பதிலாக, எந்த கட்டணமும் வசூலிக்காமல் புதிய குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும். வடசென்னையில் பக்கிங்ஹாம், கேப்டன், ஓட்டேரி நல்லா கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டில், புதிய மாவட்டச் செயலாளராக எல்.சுந்தர்ராஜன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், எம்.ராமகிருஷ்ணன், ஆர்.ஜெயராமன், வி.ஜானகிராமன், ஆர்.லோகநாதன், அ.விஜயகுமார், எஸ்.ராணி, கே.எஸ்.கார்த்தீஸ்குமார், எம்.பூபாலன், பா.சரவணதமிழன், எஸ்.பாக்கியலட்சுமி ஆகிய மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உட்பட 37 மாவட்டக் குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT