Published : 27 Dec 2021 06:08 PM
Last Updated : 27 Dec 2021 06:08 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ரயில்வே மேம்பாலப் பணிக்காக அகற்றப்பட்ட நாப்பு துரை பாதை கல்வெட்டை நினைவுச் சின்னமாக வைக்க வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணா சாலையானது நூற்றாண்டுக்கு முன்பு நடைபாதையாக இருந்ததைக் குறிப்பிடும். ஆங்கிலேயே கால நாப்பு துரை கல்வெட்டை மீண்டும் அதே சாலையில் நினைவுச் சின்னமாக வைத்துப் பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் அருகே உள்ள நெடுஞ்சாலையில், ‘ஏ.ஆர்.நாப்பு‘ என்ற பெயரில் ஆங்கிலேயர் கால கல்வெட்டு இருந்தது. கல்வெட்டு இருந்த சாலை, நூற்றாண்டுக்கு முன்பு நடைபாதையாக (தற்போது அண்ணா சாலை என்ற பெயரில் பிரதான சாலையாக உள்ளது) இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், ‘நாப்பு துரை பாதை’ எனக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த பிரபலமான ஆட்சியர் ஏ.ஆர்.நாப்புவை கவுரவிப்பதாக கல்வெட்டு தகவல் கூறுகிறது. அப்போதைய வருவாய்த் துறை மூலமாக கடந்த 1909-ம் ஆண்டு கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது.
நூற்றாண்டுகளைக் கடந்து, நடைபாதையின் அடையாளமாக இருந்த நாப்பு துரை பாதை கல்வெட்டு, ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டுள்ளது. 110 ஆண்டுகளாகத் தடம் பதித்திருந்த கல்வெட்டின் நிலை, தற்போது புதிராக உள்ளது. இதற்கிடையில், நூற்றாண்டு கால நினைவாக இருந்த கல்வெட்டை, அதே சாலையில் மீண்டும் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்களும், நகர மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வரலாற்று ஆர்வலரும், மதிமுக மாணவரணி மாநில துணைச் செயலாளருமான வழக்கறிஞர் பாசறை பாபு கூறும்போது, “நூற்றாண்டுக்கு முன்பு நடைபாதையாக இருந்த சாலை, மேம்பாலமாக உருவெடுத்துள்ளது. பல தரப்பு மக்களின் உரிமைக்காகப் போராடிய களமாக, நடைபாதையாக இருந்த அண்ணா சாலை திகழ்ந்தது. ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளதால், உரிமைப் போராட்டங்களை, எதிர்காலத்தில் காண முடியாது. அதேபோல், நூற்றாண்டு நினைவுச் சின்னமாக இருந்த ‘நாப்பு துரை பாதை’ கல்வெட்டையும் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அக்கல்வெட்டு மட்டுமே, தற்போதைய அண்ணா சாலையானது, நூற்றாண்டுக்கு முன்பு நடைபாதையாக இருந்ததற்கு அடையாளமாகவும், சாட்சியாகவும் இருந்துள்ளது. எனவே, நாப்பு துரை பாதை கல்வெட்டை, ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் நினைவுச் சின்னமாக வைத்துப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே மேம்பாலப் பணிகள் விரைவில் முடிந்து திறக்கப்பட உள்ளது. திறப்பு விழாவில் நாப்பு துரை பாதை கல்வெட்டும் நினைவுச் சின்னமாக இடம்பெற்றால், வரலாற்று ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT