Published : 27 Dec 2021 06:18 PM
Last Updated : 27 Dec 2021 06:18 PM
சென்னை: சென்னையில் மட்டும் அனைத்துத் தொகுதிகளிலும் வாழ்வதற்கே தகுதியில்லாத 23 ஆயிரம் வீடுகள் இருப்பது கணக்கெடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவொற்றியூரில் அரிவாக்குளம் பகுதியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புக் கட்டிடம் இன்று காலை (திங்கள்கிழமை) இடிந்து விழுந்தது. இக்கட்டிடத்தில் இருந்த 24 குடியிருப்புகளும் இடிந்து விழுந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா எனத் தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர். உயிர் சேதம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இத்தகவலறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இன்று காலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் உத்தரவொன்றைப் பிறப்பித்தார். அதில், விபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக மாற்றுக் குடியிருப்புகள் வழங்கவும், பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
குடியிருப்புகள் இடிந்து விழுந்த பகுதிகளில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகளும் மீட்புப் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீட்பு, நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார். இன்று பிற்பகல் இடிபாடுகளில் சிக்கிய மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''வீடுகளை இழந்தவர்களுக்கு சில நாட்களுக்குள் மாற்றுக் குடியிருப்புகள் வழங்கப்படும் எனவும், தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அறித்துள்ளார். கட்டிடம் இடிந்து விழுந்ததில் வீடிழந்து நிற்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைத் தற்போது நிவாரண முகாம் மண்டபங்களில் தங்க வைத்துள்ளோம். துறை அதிகாரிகளுடன் சென்று, மாற்று இடத்திற்காக கே.பி.பார்க் உள்ளிட்ட மாற்றுக் குடியிருப்புப் பகுதிகளை நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய உள்ளோம். அதனை அடுத்து பாதிக்கப்பட்ட அந்த 24 குடும்பங்களுக்கும் இன்னும் ஓரிரு தினங்களில் மாற்று இடங்கள் வழங்கப்படும். தலா 1 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை இன்று மாலைக்குள் வழங்கப்படும்.
சென்னையில் 40, 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் மக்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத நிலையில் உள்ள வீடுகளை இடித்துவிட்டுப் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற எண்ணம் கடந்த ஆட்சியாளர்களுக்கு இல்லை. சென்னையில் மட்டும்
அனைத்துத் தொகுதிகளிலும் வாழ்வதற்கே தகுதியில்லாத 23 ஆயிரம் வீடுகள் இருப்பது கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
இது முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இது இரண்டு மூன்று ஆண்டுகளில் படிப்படியாக அகற்ற முடிவெடுக்கப்பட்டு ஏற்கெனவே இருந்தவர்களுக்கே புது வீடுகள் கட்டித்தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் முதற்கட்டமாக இந்த நிதியாண்டில் 7,500 வீடுகள் கட்டித் தருவதற்காக ரூ.2,500 கோடி ஒதுக்கியுள்ளார் தமிழக முதல்வர். விரைவில் இன்னும் 3, 4 ஆண்டுகளில் சென்னையில் பாழடைந்த, சிதிலமடைந்த நிலையில் ஒரே ஒரு வீடு கூட இருக்காது. அப்படிப்பட்ட இடங்களில் வசிப்பவர்களுக்குப் புதிய பொலிவோடு புதிய வீடுகளை முதல்வர் வழங்குவார்''.
இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT