Published : 27 Dec 2021 05:25 PM
Last Updated : 27 Dec 2021 05:25 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் 15 முதல் 18 வயதுடைய மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளிலேயே கரோனா தடுப்பூசி முகாம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
புதுவையை 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல்வேறு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. புதுவையில் இதுவரை 2-வது தவணை உட்பட 13 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உருமாறிய கரோனா வைரஸான ஒமைக்ரான் பரவும் சூழலில், '15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் தொடங்கப்படுவுள்ளது. முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 10-ம் தேதியிலிருந்து பூஸ்டர் டோஸ் எனப்படும் கூடுதல் தடுப்பூசி போடப்படும்" என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் குழந்தைகளுக்கு தடுப்பூசி திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, தமிழகத்தில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு என 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. புதுவையில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு உட்பட்டோருக்காக தயாரிக்கப்பட்டுள்ள ’கோவாக்சின்’ தடுப்பூசியை செலுத்த, அவசர கால பயன் பாட்டுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி தொடர்பாக எந்த தகவலும் இல்லை.
எனவே புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தினை அணுகி, தேவையான கோவாக்சின் தடுப்பூசியை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 15 வயது முதல் 18 வயதுக்குள் 80 ஆயிரம் மாணவர்கள் இருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை, பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து பள்ளிகளிலேயே சிறப்பு முகாம் நடத்தி, தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT