Published : 27 Dec 2021 05:01 PM
Last Updated : 27 Dec 2021 05:01 PM

தமிழகத்தில் மின்கட்டணத்தோடு சேர்த்துள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்க: விஜயகாந்த் வலியுறுத்தல்

விஜயகாந்த் | கோப்புப் படம்.

சென்னை: "தமிழகத்தில் மின்கட்டணத்தோடு ஜிஎஸ்டி வரியை சேர்த்துள்ளதால் மக்களுக்கு கூடுதல் சுமையாக உள்ளது. இதனை உடனே ரத்து செய்யவேண்டும்" என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பதிவுக் கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் கட்டணம், வளர்ச்சிக் கட்டணம், ஆரம்ப மின் பயன்பாடு கட்டணம், மின்துண்டிப்பு கட்டணம் என பல வகையான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுகளில் எந்த கட்டணத்துக்கும் இதுவரை ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை. ஆனால், இவை அனைத்திற்கும் தற்போது 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் மின் பயன்பாட்டுக் கட்டணம் தவிர பிற மின் கட்டணங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு அதிமுக உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், ''தமிழக மக்கள் மின் கட்டணத்தை ஏற்கெனவே அதிக அளவில் செலுத்தி வரும் நிலையில், தற்போது ஜிஎஸ்டி வரியை மறைமுகமாக மின் கட்டணத்தில் சேர்த்திருப்பது மக்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது.

இது மின்கட்டண உயர்வுக்கு மிகப் பெரிய அடித்தளமாக அமைந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்துவதால் மின் கட்டணம் அதிகரிப்பதோடு, அதனுடன் ஜிஎஸ்டி வரியும் சேர்த்துள்ளதால், மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. மின்கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதை உடனடியாக ரத்து செய்வதோடு, இந்த விவகாரத்தில் அரசு வெளிப்படையாக செயல்படவேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x