Published : 27 Dec 2021 03:51 PM
Last Updated : 27 Dec 2021 03:51 PM

மத்திய அரசிடமிருந்து வெள்ள நிவாரண நிதியைப் பெறுவதில் தமிழகம் அலட்சியம் காட்டக் கூடாது: ராமதாஸ்

கோப்புப் படம்

சென்னை: தமிழகத்திற்கான மழை வெள்ள நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு காட்டும் தாமதம் ஏமாற்றம் அளிக்கிறது என்றும், மத்திய அரசிடமிருந்து மழை மற்றும் வெள்ள நிவாரண நிதியைப் பெறுவதில் தமிழக அரசு அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவற்றுக்குத் தேவையான நிதி இன்னும் வழங்கப்படவில்லை. தமிழகத்திற்கு மழை வெள்ள நிவாரணம் வழங்குவதில் காட்டப்படும் தாமதம் ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் அண்மைக்காலத்தில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் மழை பெய்துள்ளது. சென்னை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு பெய்த மழை, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றைக் காட்டிலும் இப்போது இன்னும் கூடுதலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை அனைவரும் அறிவர்.

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலை, கழிவு நீர் கால்வாய்கள், மழை நீர் வடிகால்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை சரி செய்வதற்கு பெருமளவில் நிதி தேவை. மற்றொரு புறம் வெள்ளத்தால் வீட்டுக்குள் முடங்கி வாழ்வாதாரத்தையும், மழை வெள்ள நீர் வீட்டுக்குள் புகுந்ததால் உடமைகளையும் இழந்த மக்களுக்கு குறைந்தது ரூ.5,000 இழப்பீடு வழங்க வேண்டும். மழை மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு தேசியப் பேரிடர் நிதியிலிருந்து மத்திய அரசு நிதி வழங்கினால்தான் இவற்றை நிறைவேற்ற இயலும்.

மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை சரி செய்வதற்காக இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாத மத்தியில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், மத்திய அரசுத் தரப்பிலிருந்து இடைக்கால நிதியுதவி எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக, மத்தியக் குழு தமிழ்நாட்டில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை அளித்த பிறகு தான் எந்த விதமான நிதியுதவியும் வழங்க முடியும் என்று மத்திய அரசுத் தரப்பில் உறுதிபட தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, மத்திய அரசால் அமைக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான குழுவினர் தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ததுடன் கடந்த நவம்பர் 24-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்திற்கு மழை மற்றும் வெள்ள நிவாரணமாக ரூ.4,626 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் ஒரு மாதத்திற்கு மேலாகியும் மத்திய அரசிடமிருந்து வெள்ள நிவாரண நிதி தொடர்பாக சாதகமான பதில் எதுவும் வரவில்லை.

அதைவிட கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த மத்தியக் குழு அதன் அறிக்கையைக் கூட மத்திய அரசிடம் தாக்கல் செய்ததாக இன்னும் தகவல் இல்லை. தமிழகம் மற்றும் புதுவையில் ஆய்வு செய்த குழுவினர் நினைத்தால் ஒரு வாரத்தில் அறிக்கையை நிறைவு செய்து தாக்கல் செய்திருக்க முடியும். இயற்கை பேரிடர் தொடர்பான நிகழ்வுகளில், நிதியுதவி வழங்குவது குறித்த அறிக்கையை தாக்கல் செய்வதற்குக் கூட இவ்வளவு தாமதிப்பது நியாயமல்ல. இத்தகைய அறிக்கைகளை தாக்கல் செய்ய காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.

மத்திய அரசிடமிருந்து மழை மற்றும் வெள்ள நிவாரண நிதியைப் பெறுவதில் தமிழக அரசு அலட்சியமாக இருக்கக் கூடாது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் தலைமையில் உயர்நிலைக் குழுவை டெல்லிக்கு அனுப்பி தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதியை விரைவாகப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிதியைக் கொண்டு சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பொதுமக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகத்தான் இருக்கிறது. எனவே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x