Published : 27 Dec 2021 03:24 PM
Last Updated : 27 Dec 2021 03:24 PM

சிஎம்ஏ தேர்வுகளில் இந்தி அல்லாத தேர்வர்களிடம் அப்பட்டமான பாரபட்சம்: சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

கோப்புப் படம்

சென்னை: சிஎம்ஏ தேர்வுகளில் இந்திக்கும் இந்தி அல்லாத தேர்வர்களுக்கும் அப்பட்டமான பாரபட்சம் காட்டப்படுவதாக இந்திய செலவு கணக்காளர்கள் கல்லூரி நிர்வாகத் தலைவருக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அக்கல்லூரி நிர்வாகத் தலைவர் ராஜு ஐயருக்கும், துணைத் தலைவர் விஜேந்தர் சர்மாக்கும் அவர் எழுதியுள்ள கடித்ததில், "CMA (Inter) தேர்வுகளில் இந்திக்கும், இந்தி அல்லாத தேர்வர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக அத்தேர்வை எழுதுகிறவர்கள் மற்றும் தேர்வர்களின் பெற்றோர்கள் அணுகி கவனத்திற்கு கொண்டு வந்தனர். நானும் அந்த தேர்வுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையைப் பார்த்தேன். அப்பட்டமான பாரபட்சம் அதில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அந்த அறிவிக்கையின் 13-வது அம்சம் 'இந்தி வழி தேர்வர்களுக்கு மட்டும் எழுத்துபூர்வமான விடைத்தாள் (Physical answer sheet) இறுதி மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு இந்தி வழி தேர்வர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள்.' என்று அழுத்தமாக கூறப்பட்டுள்ளது.

இந்தி அல்லாத வழித் தேர்வர்கள் அதாவது ஆங்கிலத்தில் தேர்வு எழுதுபவர்கள் கணினி தட்டச்சு வாயிலாக விளக்க முறை சார் கேள்விகளுக்கு விடைகள் தர வேண்டும். இதில் முன்னர் 100 மதிப்பெண்னுக்கு 40 மட்டுமே தரப்பட்டு வந்த நிலை மாற்றப்பட்டு தற்போது 100 மதிப்பெண்ணுக்கு 60 என விளக்க முறை கேள்விகளுக்கான மதிப்பெண்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

தட்டச்சு வாயிலாகவே விடைகளை அளிக்க வேண்டும் என்கிற பாரபட்சம் ஆங்கில வழி தேர்வர்களுக்கு சிரமத்தை தருவதோடு மதிப்பெண்களையும் குறைத்து விடும் என்ற அச்சம் உள்ளது. இந்தி மொழியில் தேர்வெழுதுகிறவர்களுக்கு மட்டும் இந்த சிறப்பு வழிமுறை எதனால் வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டு இல்லாத இந்த விதிமுறை இந்த ஆண்டு சேர்க்கப்பட்டு, மதிப்பெண்களும் உயர்த்தப்பட்டது ஏன்?

ஏன் இந்தி அல்லாத மொழியில் எழுதுகிறவரின் எழுத்துபூர்வ விடைத்தாள் எடுத்துக் கொள்ளப்படாது? எப்படி ஒரே தேர்வுக்கு இரண்டு வழிமுறைகள், இரண்டு விதமான விதிகள் இருக்க முடியும்? இது எப்படி தேர்வு எழுதுகிறவர்களுக்கு சமமான நியதியாக இருக்கும்? இந்தி அல்லாதவர்களுக்கு சமதள ஆடுகளத்தை எப்படி தரும்? விரைவு தட்டச்சுக்குப் பழகாத இந்தி தேர்வர்கள் வேகமாக கையில் எழுதி கொடுத்து விடுவார்கள். ஆனால் இந்தி அல்லாத மாணவர்கள் வேறு வழியில்லாமல் அதிக நேரம் எடுத்து தட்டச்சு செய்து தான் கொடுக்க வேண்டும் என்பது அப்பட்டமான அநீதி.

குறிப்பாக பிரிவு சி & டி-க்கானவற்றில் கூடுதல் காலத்தை விழுங்குவது தவிர்க்க முடியாது. ஆயிரக்கணக்கான தேர்வர்கள், இத்தேர்வை எழுத வேண்டியுள்ளது. அதற்குள் இப்பாரபட்சம் நீக்கப்பட வேண்டும் என்று கோருகிறேன்" என்று அந்தக் கடிதத்தில் மதுரை எம்.பி வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x