Published : 27 Dec 2021 01:00 PM
Last Updated : 27 Dec 2021 01:00 PM

இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்; மீனவர் உரிமை காக்க நிரந்தரத் தீர்வு: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் | கோப்புப் படம்.

சென்னை: இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல் நியாயமற்றது, 68 மீனவர்களை மீட்பதோடு மீனவர்களின் உரிமைகளைக் காக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தலைமையில் இயங்கும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 55 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் என மொத்தம் 68 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் டிச.18, 19 ஆகிய தேதிகளில் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு சிறைபிடித்துள்ள 68 தமிழக மீனவர்களை விடுவிக்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என ராமேசுவரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் தலைமையில் இயங்கும் மக்கள் நீதி மய்யம் விடுத்துள்ள அறிக்கையில், ''ராமேஸ்வரம் மீனவர்கள், 8-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனவரி 1-ம் தேதியன்று ரயில் மறியல் போராட்ட அறிவிப்பும் விடுத்துள்ளனர்.

கடந்த 18-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். தனுஷ்கோடி-இலங்கை நெடுந்தீவு இடையே கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மறுநாளே மேலும் இரண்டு விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 13 மீனவர்களையும் கைது செய்திருக்கின்றனர். டிசம்பர் 18,19,20 ஆகிய 3 நாட்களில் மட்டும் 68 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; 10 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல் நியாயமற்றது.

இதனை எதிர்த்து, கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சக்தி, கோபி, குட்வின், ரகு, பிரபு, கருமலையான் உள்ளிட்ட 55 மீனவர்களையும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்களையும் விடுதலை செய்யக் கோரியும்; பறிமுதல் செய்யப்பட்ட 10 விசைப்படகுகளை விடுவிக்கக் கோரியும் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீன்பிடித் தொழிலையே நம்பி இருக்கும் மீனவர்களின் நிலை மோசமாக பாதிக்கப்படும்போது, அதைத் தடுக்க மத்திய-மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல; கண்டனத்திற்குரியது. ஒவ்வோர் ஆண்டும் வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் தொடர்கதையாகிவிட்டன. மேலும், `கரோனா தடுப்பு நடவடிக்கை' என்ற பெயரில் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளித்தது மனித உரிமை மீறும் செயல். இதுபோன்ற வன்முறைகள் நடந்தும் மத்திய-மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி கடலுக்குள் செல்லும் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது, அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் கடும் மன உளைச்சலையும் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தும். மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றித் தவித்து வருகின்றன. இலங்கை-தமிழ்நாடு இடையிலான கடல் எல்லைப் பிரச்சினை காலங்காலமாகத் தொடரும் ஒன்று. மிகக் குறுகிய அளவிலேயே இருக்கும் எல்லைப் பகுதியைக் காரணம் காட்டி தமிழக மீனவர்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு இலங்கைக் கடற்படையினர் அத்துமீறல்களைச் செய்துவருகின்றனர்.

இத்தகைய நிலையை மாற்றவும் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மீனவர்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மத்திய அரசு உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய-மாநில அரசுகள், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 68 பேரையும் விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட 10 படகுகளை மீட்டெடுக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண இரு தரப்பினர் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x