Published : 27 Dec 2021 12:28 PM
Last Updated : 27 Dec 2021 12:28 PM
சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதிதுறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் தரவு மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தரவு மையத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டப்பேரவை நிதி நிலை அறிக்கையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக அறிவித்த அறிவிப்புகளில் ஒன்றான இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறைக்கான தரவு மையம் இன்று (27-12-2012) சென்னை அரும்பாக்கம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப்பிரிவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை, இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் யோகா ஆகிய மருத்துவ முறைகளின் கீழ் தமிழக மக்களுக்குச் சிறப்பான மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் தோன்றிய மருத்துவம் என்றும், தமிழ் மருத்துவம் என்றும் அழைக்கப்படும் சித்த மருத்துவம் மக்களுக்குச் சிறப்பான மருத்துவ சேவையை வழங்குவதில் பெரும் பங்காற்றி வருகிறது. இத்துறையினர் இயங்கி வரும் 1,542 மருத்துவமனைகள் மற்றும் மருத்துவப் பிரிவுகளில் சராசரியாக 72,158 வெளிநோயாளர்கள் தினந்தோறும் சிகிச்சை பெற்றுப் பயனடைந்து வருகின்றனர். மேலும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு சிறப்பு மருத்துவப் பிரிவு செயல்பட்டு வருகிறது.
சித்த மருத்துவம், கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முதல் அலையிலிருந்தே பெரும் பங்கு வகித்துள்ளதுடன், தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களில் 64 இடங்களில் சித்த மருத்துவ கோவிட் சிகிச்சை மையங்களை அமைத்து மருத்துவ சேவையை வழங்கியது. அனைத்து சித்த மருத்துவ கோவிட் சிகிச்சை மையங்களையும் ஒருங்கிணைக்கும் முகமாக சித்த மருத்துவ வார்ரூம் என்கிற ஒருங்கிணைந்த கட்டளை மையம் நிறுவப்பட்டு கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயலாற்றியது.
தற்போது முதல்வர் ஸ்டாலின் நடப்பாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒருங்கிணைந்த கட்டளை மையத்துடன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் செயல்படும் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருத்துவப் பிரிவுகளிலிருந்து மின்னணு பலகை (Realtime dashboard) மூலம் தகவல்களை உடனுக்குடன் பெற்று மெட்டா பகுப்பாய்வு (Meta Analysis) படி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இந்திய மருத்துவ முறைகளின் வாயிலான சிகிச்சைகளை மேம்படுத்த, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறைக்கான தரவு மையம் (Data cell) இத்துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் தொடங்கப்பட்டுள்ளது.
தரவு மையத்தின் செயல்பாடுகள்:
* மின்னணு தகவல் பலகை (Realtime Dashboard) மூலமாக அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருத்துவப் பரிவுகளில் இருந்து தரவுகளை உடனுக்குடன் பெற்று ஆராய்ச்சிகளை மேம்படுத்துதல்
* இந்திய மருத்துவ முறைகளின் கீழ் முதல் 20 நோய்களுக்கான புள்ளியியல் தரவுகளைப் பெற்று, உடனுக்குடன் தரவு பகுப்பாய்வு மேற்கொள்வது
* தரவு பகுப்பாய்வு மேற்கொள்வதற்கேற்றவாறு இத்துறை சார்ந்த தரவுகளைச் சேகரித்தல்
* சிகிச்சை முறைகளை மேம்படுத்தி உடனுக்குடன் முடிவுகளை எடுக்க சேகரித்த இத்துறை சார்ந்த தரவுகளை வழங்குதல்
* இத்துறையின் நிர்வாக செயல் திறனை மேம்படுத்த முக்கியப் பங்காற்றுதல்
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறைக்கான தரவு மையம் (Data cell) இத்துறையின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் தேவைக்கேற்ப மருத்துவ சேவை புரிவதற்கும், ஆராய்ச்சிகள் மூலம் இந்திய முறை மருத்துவத்தினை மேம்படுத்தவும் உறுதுணையாகச் செயல்படும்.
இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் கணேசன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT