Published : 27 Dec 2021 12:09 PM
Last Updated : 27 Dec 2021 12:09 PM
சென்னை: சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அரும்பாக்கத்தில் இன்று (திங்கட்கிழமை) அமைச்சர் மா.சுப்பிரமண்யன் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் தரவு அளவு மையம் அரும்பாக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், யோகா, யுனானி, ஓமியோபதி போன்ற ஆய்வுகளை மேம்படுத்துவதற்கும், ஆய்வின் முடிவுகளைப் பன்னாட்டு இதழ்களில் வெளியிடுவதற்கும், இந்திய மருத்துவ முறைகளில் அரசு மருத்துவமனைகளில் எந்தவகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது, எந்த வகையில் நெறிமுறைப்படுத்தப்படுகிறது என்ற விஷயங்களை இந்தத் தரகு அலகு மூலம் அனைவரும் அறிந்துகொள்கிற வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
அந்த வகையில் இன்று இந்தத் தரகு அலகு மையம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய மருத்துவமுறை மேம்படுத்தப்படும். கரோனா இரண்டாம் அலையின்போது சுமார் 33,000 பேருக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் வெற்றியும் காணப்பட்டது. இந்தத் தரகு அலகு மூலம் சித்த மருத்துவர்களை இணைக்க முடியும். மாதவரத்தில் 19.6 ஏக்கர் பரப்பில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு வருகிறது. சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.
கரோனாவால் உயிரிழந்த 20,934 பேருக்கு 50,000 ரூபாய் வீதம் இதுவரை 104 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT