Published : 27 Dec 2021 10:59 AM
Last Updated : 27 Dec 2021 10:59 AM
சென்னை: அனைத்து தூய்மைக் காவலர்களுக்கும் தமிழக அரசு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"தமிழக அரசு, மாநிலம் முழுவதும் தூய்மைக் காவலர்களாக பணியாற்றுபவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைக் காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர்கள் வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் சேகரிக்கும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாகப் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
கிராமப்புறப் பகுதிகளில் தூய்மைக் காவலர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 3,600 கிடைப்பதாக தெரிவிக்கின்றனர். இந்த ஊதியம் போதுமானதல்ல. நகர்ப்புறப் பகுதிகளில் ஊதியம் சற்று கூடுதலாக கொடுப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தேசிய வேலை உறுதித்திட்டம், அரசு வேலை என்று குறிப்பிட்டு குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தினாலும் குப்பை சேகரிக்க போதிய வாகனம் இல்லாததாலும், வாகனம் கனமாக இருப்பதாலும் பணியில் தொய்வு ஏற்படுகிறது.
இப்பணியில் வயதானவர்களும் ஈடுபடுவதால் அவர்களுக்கு கூடுதல் சிரமம் ஏற்படுகிறது. கரோனா காலத்தில் தூய்மைக் காவலர்களின் சேவைப்பணி பெரிதும் பாராட்டத்தக்கது. சம்பளம் குறைவாக இருந்தாலும் தங்கள் பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். குப்பைகளை சேகரித்து, பிரித்து உரங்களாக்கும் பணியில் ஈடுபடும் தூய்மைக் காவலர்களின் தூய்மைப் பணி மிகவும் முக்கியமானது.
இப்படி சுற்றுப்புறத் தூய்மை, மக்கள் நலன் மற்றும் மாநில நலன் ஆகியவற்றிற்காக அக்கறையோடு பணியை மேற்கொண்டு வரும் தூய்மைக் காவலர்கள் ஊதிய உயர்வு வழங்கவும், வாகனம் தொடர்பான குறைபாடுகளை களையவும், பணி நிரந்தரம் செய்யவும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் இன்னும் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இன்றையக்காலக் கட்டத்தில் ஒரு மாதத்திற்கு ரூ. 3,600 சம்பளம் என்ற ரீதியில் பணி செய்தால் பணி சிறக்கலாமே தவிர அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான பொருளாதாரம் போதாது. எனவே தமிழக அரசு, மாநிலம் முழுவதும் தூய்மைக் காவலர்களாக பணிபுரிவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி, பணி நிரந்தரம் செய்து அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய உதவ வேண்டும் என்று தமாகா சார்பில் கோரிக்கை வைக்கிறேன்."
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT