Published : 27 Dec 2021 08:28 AM
Last Updated : 27 Dec 2021 08:28 AM
திரைப்பட பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (டிச.27) காலை நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றார்.
இன்று காலை 7.30 மணியளவில் சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், மனைவி துர்காவுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். அவர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் சென்றிருந்தார்.
முன்னதாக மாரடைப்பு காரணமாக நேற்று மறைந்த மாணிக்க விநாயகம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அஞ்சலிக் குறிப்பில், "பிரபல திரைப்படப் பாடகரும் நடிகருமான வழுவூர் மாணிக்க விநாயகம் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். எண்ணூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடி, துன்பமானாலும் துள்ளலானாலும் தனது குரல்வளத்தால் அவ்வுணர்வுகளைத் துல்லியமாக ரசிகர்களுக்குக் கடத்தி விருந்தளித்தவர் அவர்.
அவரது தந்தை மற்றும் அண்ணனைப் போலவே, தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற அன்பைப் பொழிந்த அவர், அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், மிகுந்த அக்கறையோடு நலம் விசாரிப்பவர்.
பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கலையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆறுதலை உரித்தாக்குகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்ததாவது:
பிரபல திரைப்படப் பாடகர் திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!
தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அன்பைப் பொழிந்து, பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.https://t.co/okHUvLQPaM pic.twitter.com/VtBuSbziy2
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT