Published : 11 Mar 2016 08:03 AM
Last Updated : 11 Mar 2016 08:03 AM
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ளது சோழகன்குடி காடு. தமிழக வேளாண்மைத் துறை அமைச்சரான ஆர்.வைத்திலிங் கத்தின் ஊரான தெலுங்கன்குடி காடுக்கு பக்கத்து கிராமம் இது.
இந்த கிராமத்தின் விவசாயி கோ.பாலன்(40) என்பவருக்கு நேர்ந்த கொடுமையை காட்டும் வீடியோ பதிவு, வாட்ஸ் அப் மூல மாக இப்போது வெளியே தெரிய வந்துள்ளது.
கடந்த 4-ம் தேதி காலையில், தனது வயலில் அறுவடை செய்த நெற்கட்டுகளை டிராக்டரில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு செல்ல முயன்ற விவசாயி பாலனை, கடன் தவணை நிலுவைக்காக போலீஸாரும், தனி யார் நிதி நிறுவனத்தின் ஊழியர் களும் டிராக்டரில் இருந்து வலுக் கட்டாயமாக கீழே இறக்கி, அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.
பாலன்,கடந்த 2011-ல் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (கோட்டக் மகிந்திரா) ரூ.3,80,430 கடன் பெற்று, டிராக்டர் வாங்கினார். இந்தக் கடன் தொகையை வட்டியு டன் 6 மாதத்துக்கு ஒரு தவணை (ரூ.68,534) என, 6 தவணைகளில் ரூ.4,11,200 செலுத்தியுள்ளார். 2 தவணைகள் மட்டும் பாக்கி இருந் துள்ளது. அதையும், அறுவடை முடித்தவுடன் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி பகல் 11 மணியளவில், தனது வயலில் அறுவடை செய்த நெற்கதிர் கட்டுகளை டிராக்டரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட பாலனை, நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் 20 பேரும், பாப்பாநாடு காவல் நிலைய ஆய் வாளர் குமரவேல் தலைமையில் வந்த போலீஸார் 10-க்கும் மேற் பட்டோர் மற்றும் நிதி நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் இருவரும் தடுத்து நிறுத்தி, டிராக்டரை பறிமுதல் செய்ய வந்துள்ளதாகவும், கீழே இறங்கும்படியும் மிரட்டியுள்ளனர்.
அப்போது, ஜப்தி செய்வதற்கான நீதிமன்ற உத்தரவை காட்டும்படி தெரிவித்த பாலனை, அடித்து கீழே தள்ளி, காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்று, அங்கு நீண்ட நேரம் மண்டியிட வைத்து, பின்னர், கடுமையாக மிரட்டி கையெழுத்து பெற்ற போலீஸார், உறவினர்களிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றுக்கொண்டு பாலனை விடுவித்ததாகக் கூறப்படுகிறது.
ஊருக்கு ஒதுக்குப்புறமான, வெளியூர் தொழிலாளர்கள் வேலை செய்த இடத்தில் இந்தத் தாக்குதல் நடந்ததால், உள்ளூர் மக்களுக்கு நடந்த சம்பவம் பற்றி ஏதும் தெரியாமல் இருந்தது.
பாலனும் தன் மீதான தாக்கு தலையும், தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும், உள்காயத் தையும் வெளிய கூறத் தயங்கி, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந் துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், தனது செல்போனில் எடுத்த வீடியோ பதிவு, தற்போது வாட்ஸ் அப் மூலமாக வெளியே தெரிந்ததையடுத்து, நியாயம் கோரியும், சம்பந்தப்பட்ட நிதிநிறுவனம் மற்றும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர்.
அதிர்ச்சியில் பெற்றோர்
இதுகுறித்து நேரில் அறிவதற் காக விவசாயி பாலன் வீட்டுக்கு சென்றபோது, தனது மகனுக்கு ஏற்பட்ட பாதிப்பின் அதிர்ச்சியிலி ருந்து மீளாத, வெள்ளந்தியான அவரது தாய் மாரிக்கண்ணு தெரி வித்தது: “நேத்து டி.வி.ல பாத்தப்ப என்னோட நெஞ்சே வெடிச்சு போயிடும்போல இருந்துச்சு. ஏம்பா, போலீஸ்காரங்க கூட்டிட்டு போனாங்கன்னுதானே சொன்னே. இத, ஏன் எங்கிட்ட சொல்லலன்னு” கேட்டேன். “எனக்கு நடந்த கொடுமை தெரிஞ்சிருந்தா, நீ உயிரோட இருக்க மாட்டம்மான்னு” சொல்லிட்டு கதறிட்டான் என் மகன். இருபத்திநாலு மணி நேரமும் உழைப்பான். வேலை உண்டு, வீடு உண்டுனு இருப்பான். யாரிடமும் கடன் வாங்கியதில்லை. கடன் இல்லாமல் வாழ்ந்த குடும்பம். அந்த பேங்குகாரங்கதான், விடாம தொரத்தி கடன் கொடுத்தாங்க. இப்ப, எங்க குடும்பத்தோட நிம்மதி யையும் கெடுத்துட்டாங்க” என்றார்.
“என் மகன் ஒன்றும் கொலை குத்தம் செய்யல. வறட்சி. வெள்ளத் தால பல வருசமாகவே விவசாயம் கடுமையா பாதிச்சி போச்சு. இருந் தாலும், 6 தவணை கட்டியாச்சு. போன வருசமும், இந்த வருசமும் காவிரி தண்ணி தாமதமா வந்த தாலயும், சர்க்கரை ஆலை ஆபீச ருங்க, கரும்பு வெட்டும் ஆர்டரை ரொம்ப தாமதமா தந்ததாலும், பெரிய நஷ்டம் ஆயிடுச்சு. மகனுக் கும் உடம்பு சரியில்ல. அதனால, மீதம் 2 தவணை கட்ட முடியல. அறுவடை முடிச்ச உடனே கட்டுறதா சொல்லியிருந்தோம். அதுக்குள்ள, போலீஸோட வந்து, அட்டூழியம் பண்ணிட்டாங்க. என்னோட 75 வய சுல, விவசாயிக்கு, இதுபோல ஒரு கொடுமை நடந்து கேட்டதுல்ல” என்றார் பாலனின் தந்தை கோவிந்தசாமி.
“இதுவர, மாடு வைச்சுதான் உழுதுகிட்டு இருந்தோம். எங்க ளுக்கு வயதானதாலயும், பெரிய மகனுக்கு உடம்பு சரியில்லாத தாலயும். பாலனும், கூலி ஆட் களும் மாடு கட்டி உழவு செய் வாங்க. குடும்பத்தோட ஆதாரமே பாலன்தான். இப்ப, உழவு மாடுங்க ஜோடி விலை 50 ஆயிரத்துல இருந்து 1 லட்சம் ரூபாய் வரை விக்குது. தீவனம், பராமரிப்பு செலவு ரொம்ப கூடிப் போச்சு. அந்த நேரத்துலதான், டிராக்டர் கடன் தரேன்னு வீட்டுக்கே வந் தாங்க. இப்ப, நிம்மதி இழந்து தவிக்கிறோம்” என்று மேலும் கூறினார் கோவிந்தசாமி.
தன்னைத் தாக்கியவர்கள் மீது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்திருந்த விவசாயி பாலன் தெரி வித்ததாவது: எங்கள் குடும்பத்துக்கு 4 ஏக்கர் நிலம் உள்ளது. நான்தான் பராமரித்து வருகிறேன். கடந்த 2 ஆண்டாக காவிரி தண் ணீர் வருவதில் தாமதம் ஏற்பட்ட தால் நெல் சாகுபடியில் பாதிப்பும், கரும்பு வெட்டும் ஆர்டரை ஜனவரி மாதத்தில் தர வேண்டிய சர்க்கரை ஆலை, கடந்த ஆண்டு ஜூனிலும், இந்த ஆண்டு மார்ச்சிலும் தந்ததால், கரும்பின் எடை குறைந்து பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
நான், மாடு கட்டித்தான் உழுது வந்தேன். வீடு தேடி வந்து டிராக்டர் கடன் தருவதாக தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் நச்சரித்தனர். நான், வேண்டாம் என்று தவிர்த்து வந்தேன். மூன்றரை மாதங்கள் என்னை விடாமல் துரத்தியதால், உழவுக்கும், நெல் மூட்டைகள் ஏற்றவும், கரும்பு வெட்டி சர்க்கரை ஆலைக்கு ஏற்றிச் செல்லவும் பயன்படும் என்று வாங்கினேன்.
முன்பணமாக ரூ.1.20 லட்சம் கட்டி ரூ.5 லட்சத்துக்கு டிராக்டர் வாங்கினேன். டிரெக், ஏர் கலப்பை, கூரை என மொத்தம் ரூ.9.75 லட்சம் ஆகிவிட்டது. வருமானம் குறைவாகத்தான் உள்ளது. இருந் தாலும், 6 தவணைகள் கட்டிவிட் டேன். அறுவடை முடித்து, நிலுவைத் தவணையை செலுத்த இருந்த நிலையில், நிதிநிறுவனத்தினரும், போலீஸாரும் அத்துமீறி என்னைத் தாக்கி, அவமானத்துக்குள்ளாக்கி விட்டனர்” என்றார் பாலன்.
ஸ்டாலின் வலியுறுத்தல்
திமுக பொருளாளர் ஸ்டாலின் முகநூலில் கூறியிருப்பதாவது:
காவல்துறை மற்றும் நிதி நிறுவ னத்தின் இந்த செயலுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள் கிறேன். தனியார் நிதி நிறுவன ஊழியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். விவசாயியை தாக்கிய காவல் ஆய்வாளர் குமார சாமியை உடனடியாக சஸ்பென்ட் செய்து, குற்ற வழக்கு தொடர வேண்டும் என்று கூறியுள்ளார்.
மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து தமிழக அரசுக்கு விளக்கமளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விவசாயி பாலன் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு தமிழக பத்திரிக்கையாளர் மூலம் கிடைத்தது. மேலும் நாளிதழ்களிலும் இதுகுறித்த செய்திகள் வெளியாகின. இந்த செயல் அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். ஆணையம் தாமாக முன் வந்து தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர்(டி.ஜி.பி) ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விளக்கமான அறிக்கையை 2 வாரத்துக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT