Published : 27 Dec 2021 02:21 PM
Last Updated : 27 Dec 2021 02:21 PM
கிருஷ்ணகிரி: மா மரங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ள நிலையில், பூச்சித் தாக்குதலில் இருந்து தடுக்க விவசாயிகளுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றுப் பாசனம், சொட்டுநீர் பாசனம் மற்றும் மானாவாரி நிலங்களில் மா சாகுபடியில் விவசாயிகள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் 1.30 லட்சம் ஏக்கரில் மா சாகுபடி நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், சூளகிரி, ஓசூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மா ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். மா ரகங்களில் மல்கோவா, அல்போன்ஸா, செந்தூரா, பீத்தர் ஆகிய ரகங்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிகளவில் வரவேற்பை பெற்றுள்ளன. மேலும், ஊறுகாய், மாங்கூழ் தயாரிப்புக்கும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் மா விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக மா விவசாயிகள் வறட்சி, பூச்சி தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். தற்போது, மா பருவகாலம் தொடங்கவுள்ள நிலையில், மா விவசாயிகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மா விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:
கடந்த காலங்களில் மா விளைச்சல் மூலம் விவசாயி களுக்கு நல்ல பலன் கிடைத்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக மா விவசாயத்தில் ஏமாற்றம்கிடைத்து வருகிறது. குறிப்பாக பூச்சித் தாக்குதல், தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளால் மகசூல் இழப்பு, விளைந்த மாங்கனிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனையை சந்தித்தனர்.
தற்போது, மா பருவகாலம் தொடங்கியுள்ள நிலையில், அதிகமழை, பனிப்பொழிவால் பூச்சித் தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பூச்சி மருந்துகளின் விலையும் 2 மடங்கு உயர்ந்துள்ளது.
கடந்தாண்டைப்போல மா விவசாயிகள் வருவாய் இழப்புகளை சந்திக்காமல் தடுக்க பூச்சித் தாக்குதலில் இருந்து காப்பது தொடர்பாகவும், மகசூல் அதிகரிக்கவும் மா சாகுபடி விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்க வேண்டும். தரமான பூச்சி மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும்.
மா அறுவடை பருவத்தில் முத்தரப்பு கூட்டத்தில் மாம்பழங்களுக்கு நிர்ணயம் செய்யும் விலையில் மாங்கூழ் தொழிற்சாலைகள் கொள்முதல் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுத்து மா விவசாயிகளை காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT