Published : 27 Dec 2021 01:00 PM
Last Updated : 27 Dec 2021 01:00 PM

முப்படைத் தலைமை தளபதி உயிரிழப்பு எதிரொலி: கொடைக்கானல் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் கைவிடப்படுகிறதா?

கொடைக்கானலில் தற்காலிகமாக சில தினங்கள் மட்டும் இயக்கப்பட்ட ஹெலிகாப்டர். (கோப்பு படம்)

கொடைக்கானல்: முப்படைத் தலைமை தளபதி சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதால் கொடைக்கானலில் ஹெலி காப்டர் சுற்றுலாத் திட்டம் கேள்விக் குறியாகி உள்ளது. இதனால், இத் திட்டம் கைவிடப்படலாம் என்று கூறப்படுகிறது.

கொடைக்கானலுக்கு மதுரை யில் இருந்து ஹெலிகாப்டரில் சுற்றுலாத் திட்டம் தொடங்கப்படும் என கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவிப்பு வெளி யானது. இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கின.

இந்திய விமானப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் கொடைக்கானல் மலைப் பகுதி மேல்பள்ளம் அருகே, அரசுக்குச் சொந்தமான காலி நிலத்தை ஆய்வு செய்தனர்.

அதேநேரத்தில் பனி மூட்டம் நிறைந்த மலைப் பகுதியில் ஹெலி காப்டர் பயணம் என்பது சவால் நிறைந்ததாகும். அண்மையில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற உயர்தர தொழில்நுட்பம் கொண்ட ராணுவ ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் அருகே விபத்துக்குள்ளானது. இதற்கு அங்கு நிலவிய பனி மூட்டம்தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

நீலகிரி மலைத் தொடரில் காணப்படும் தட்ப வெப்பநிலையே கொடைக்கானல் மலைப் பகுதி யிலும் காணப்படுகிறது. ஆண்டுக்கு ஆறு மாதம் பனி மூட்டம் மிக அதிகமாகவே காணப்படும். மற்ற மாதங்களிலும் அடிக்கடி பனி மூட்டம் நிலவுவதைக் காண முடியும்.

மேலும் கொடைக்கானல் மலைப் பகுதி பாதுகாக்கப்பட்ட வன உயிரின சரணாலயமாகும். இங்கு யானைகள், காட்டுமாடுகள், மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல் வேறு வகை வனவிலங்குகள் உள்ளன.

இந்த விலங்குகள் அடர்ந்த காட்டுப் பகுதியில் வசிக்காமல் நகர், கிராமப்புறங்களை ஒட்டி யுள்ள பகுதிகளிலேயே வசிக் கின்றன. அடிக்கடி இவை கொடைக்கானல் நகர் மற்றும் கிராமப் பகுதிகளுக்குள் வந்து செல்கின்றன. ஹெலிகாப்டர் சத்தத்தால் மிரண்டு நகர் பகுதிக் குள் வனவிலங்குகள் வர அதிகம் வாய்ப்புள்ளது.

தொழிலதிபர் ஒருவர் ஒரு முறை கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டரில் வந்தபோது பனி மூட்டம் காரணமாக உரிய இடத்தில் இறங்க முடியாமல், பள்ளி மைதானத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட நிகழ்வும் நடந்துள்ளது.

இதுகுறித்து கொடைக் கானலைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் எபெக்ட் வீரா கூறும் போது, நீலகிரி மலையில் முப்படைத் தலைமைத் தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் பனிமூட்டம் காரணமாக இருக்கலாம். மலைப் பிரதேசங்களில் ஹெலி காப்டரை பயன்படுத்துவது விபரீதத்தை விலைக்கு வாங்கு வதுபோலத்தான் என்றார்.

சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் சுற்றுலா என்பது அரசின் தொலைநோக்கு திட்டம், பல ஆண்டுகளுக்குப் பின்பு இத்திட்டத்தைச் செயல்படுத் தினால் அதிக செலவாகும். தற்போது அமைத்துவிட்டால் எதிர்காலத்தில் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்ற நோக்கில் அரசு ஹெலிகாப்டர் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இருப்பினும் இது பற்றி அரசுதான் முடிவு செய்யும், என்றார்.

நீலகிரி மலையில் முப்படைத் தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் உயர்மட்ட அள வில் விசாரணை நடந்து வருகி றது. விபத்துக்கான காரணம் அப்பகுதியில் நிலவிய பனி மூட்டம்தான் என்று விசாரணை அறிக்கையில் வருமேயானால் கொடைக்கானல் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்தை தமிழக அரசு கைவிடும் என்றே கூறப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x