Last Updated : 26 Dec, 2021 08:05 PM

3  

Published : 26 Dec 2021 08:05 PM
Last Updated : 26 Dec 2021 08:05 PM

8 ஆண்டுகளாக வாடகையே இல்லாமல் இயங்கும் கடைகள்: புதுச்சேரி விநோதம்

புதுவையில் வாடகையே இல்லாமல் இயங்கும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சொந்தமான கடைகள்

புதுச்சேரி: மாத வாடகை நிர்ணயிக்கக்கோரி துணை ஆட்சியருக்கு கோப்பு அனுப்பி வைத்தும் பதில் வராததால் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சொந்தமான இடத்தில் இயங்கும் 8 கடைகள் எட்டு ஆண்டுகளாக வாடகையே இல்லாமல் இயங்கும் வினோதம் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியிலுள்ள வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சொந்தமான 8 கடைகள் பல ஆண்டுகளாக வாடகையே செலுத்தாமல் இயங்கி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்தார். அதையடுத்து வியப்பூட்டும் பதிலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தந்துள்ளனர். அதில், "பிடிஓ அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு மாத வாடகை நிர்ணயம் செய்யக்கோரி வில்லியனூர் வருவாய்த்துறை துணை ஆட்சியருக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் பதில் வராததால் இதுநாள் வரை வாடகை நிர்ணயிக்கப்படவில்லை. எனவே மேற்படி கடைகளுக்கு வாடகை வசூலிக்கப்படாமல் உள்ளது" என்று தந்துள்ளனர்.

வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம்

இதையடுத்து ஆளுநர், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: பொதுவாக ஒரு கடையை வாடகைக்கு விடப்படும்போது வாடகையை நிர்ணயம் செய்த பின்னர்தான் ஒரு நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்படுவது வழக்கம். ஆனால் இவர்கள் இந்த கடைகளை 2013, 2015, 2016-ஆம் ஆண்டு என 8 கடைகளையும் வாடகை என்ற பெயரில் ஒப்படைத்துவிட்டு கடந்த 8 ஆண்டுகளாக வாடகை நிர்ணயம் செய்யாமலும், வாடகையே வசூல் செய்யாமல் இருக்கின்றனர். குறிப்பாக வருவாய்த்துறையினர் வாடகை நிர்ணயம் செய்து அளிக்கவில்லை என்றாலும் கூட, அதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ளாததால் ஒரு கடைக்கு சுமார் 3,000/- மாத வாடகை என்றால் கூட இந்த 8 கடைகளுக்கு இதுநாள் வரை சுமார் 18,00,000/- லட்சம் வாடகை வசூலித்திருக்க வேண்டும்.

இதற்கு வில்லியனூர் பிடிஓ, துணை மாவட்ட ஆட்சியர் (தெற்கு) ஆகிய இரு துறை சார்ந்த அதிகாரிகளின் அலட்சியமே காரணம். அரசுக்கு குறைந்தப்பட்சம் ரூ. 18 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதற்கு இந்த அதிகாரிகள்தான் பொறுப்பு. எட்டு ஆண்டுகளாக வாடகை நிர்ணயம் செய்து அளிக்காத வருவாய் தெற்கு துணைமாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மீதும், விரைந்து நடவடிக்கை எடுக்காத வட்டார வளர்ச்சி அதிகாரியிடமும் துறை ரீதியான விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x