Published : 26 Dec 2021 07:42 PM
Last Updated : 26 Dec 2021 07:42 PM

தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடங்கியுள்ளது: அண்ணாமலை பேட்டி

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை | கோப்புப் படம்.

சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சியில் கடந்த 4 மாதங்களில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடங்கியுள்ளதாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பொதுமக்களுடன் இணைந்து சென்னையில் கேட்டு ரசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

நாட்டு நடப்பை மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் பிரதமர் மோடியின் மன் கி பாத் பேச்சின் சிறப்பம்சங்களை
செய்தியாளர்கள் கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 2024ல் மோடியின் அலைதான் வீசப்போவதன் தாக்கம் இப்போதே தெரிகிறது. மூன்றாவது முறையாக 400 எம்.பி சீட்டுகளுடன் இன்னொருமுறை மோடி பதவியில் அமர்வார். பல கட்சிகள் திமுகவுடன் போகலாமா? மம்தா பக்கம் போகலாமா என யோசிக்கின்றனர். உத்தரப் பிரதேச தேர்தலுக்குப் பிறகு அந்தப் பேச்சுக்கு இடமே இருக்காது. தமிழகத்தில் பாஜக இருக்கும் அணி அதிக எம்.பிக்களைப்பெற்று அமைச்சராக அமர்வார்கள்.

கம்பீரத்தை இழந்த தமிழகக் காவல்துறை: தமிழகத்தில் குறுகிய காலத்தில் கடந்த 4 மாதங்களாக நிறைய குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இவை எதையும் நாம் ஆதாரம் இல்லாமல் வெறும் குற்றச்சாட்டாக வைக்கவில்லை. எத்தனை கொலைகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எத்தகை கொலைகள் எத்தனை பள்ளிகள் சிறுமிகள் தற்கொலை, எத்தனைப்பள்ளிகளில் போக்சோ கேஸ், 10 மாத குழந்தை கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு குற்றவாளி யாரென்று தெரியவில்லை. கோவையில் 15 வயது சிறுமி கைகால்கள்கட்டப்பட்ட நிலையில் ஒரு மூட்டையில் சிறுமியின்உடல் கிடைத்துள்ளது. குற்றவாளி யார் என்று தெரியாது. தனியாக தலையை வெட்டி அதை பூஜைசெய்கிறார்கள்.

அதையெல்லாம் முதன்முதலாக தமிழகத்தில் மக்கள் பார்க்கிறார்கள். தமிழகக் காவல்துறைக்கு ஒரு கம்பீரம் உள்ளது. தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது என்பதை நிராகரிக்க முடியாது. ஆனால் இந்த குறுகிய 4 மாத காலத்தில் காவல்துறையில் மாநில அரசின் தலையீடு உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் திமுக மாவட்டச் செயலாளர்களின் இடையூறு காரணமாக சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆரம்பித்துள்ளது. இதனால் கம்பீரமான காவல்துறை தனது நிலையை இழந்து வருகிறது.

இந்த நிலைமையை கட்டுப்படுத்தவில்லையெனில் இதன் விபரீதத்தை அடுத்த வருடத்திலிருந்து நாம் பார்க்க ஆரம்பிப்போம். மீண்டும் தமிழக காவல்துறை தனது கம்பீரத்தை திரும்பப் பெற வேண்டும். ஆளுங்கட்சியாக உள்ள திமுக அரசு தமிழகக் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும்.

எழுவர் விடுதலை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் எங்களுக்கு ஒரே நிலைப்பாடுதான். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, உணர்ச்சிகளை ஒரு பக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும். ராஜீவ் காந்தி, ஒரு முன்னாள் பிரதமர் தமிழ்நாட்டில் கொல்லப்படுகிறார். பிரதமராக இருந்தபோது அவர் எடுத்த சில முடிவுகளுக்காகக் கொல்லப்படுகிறார். ராஜிவ் கொலையோடு தொடர்புடையவர்களாக இந்தியர்களும் வெளிநாட்டவர்களும். இதற்கான சதி இந்தியாவுக்கு வெளியில் நடந்திருக்கிறது. ஆகவே, இந்திய அரசின் நிலைப்பாடு என்பது இந்தியாவுக்கான நிலைப்பாடுதான்.

நீட்எதிர்ப்பு யாருடைய ஆதாயத்துக்கானது? நீட் தொடர்பான தமிழக அரசின் மசோதாவை தமிழக ஆளுநர் அனுப்பவில்லை என்று குற்றச்சாட்டு சொல்வதை ஏற்கமுடியாது. நீட்டைப்பொறுத்தவரை சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் சொல்லியிருப்பது ஒரு கருத்து என்றால் பாஜகவின் நான்கு எம்எல்ஏக்கள் சொல்லியிருப்பதும் ஒரு கருத்து. அதைத்தாண்டி ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் சொல்லியிருப்பதும் ஒரு கருத்து. ஒரு அரசு சொல்வதற்காகவே ஒரு ஆளுநர் ஆட்சி நடத்த முடியாது. எத்தனை பேர் நீட் வேண்டும் என்று கேட்கிறார்கள். 2020-21ல் எவ்வளவு மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்து தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் அரசு கல்லூரிகளுக்கு சென்றுள்ளார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். குறிப்பாக எவ்வளவு மலைவாழ்மக்களின் சகோதர சகோதரிகள் அரசுக் கல்லூரிகளுக்கு போயிருக்கிறார்கள். குறிப்பாக பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து முதன்முறையாக அரசு கல்லூரிகளுக்கு சென்றுள்ளனர். எனவே, நீட்எதிர்ப்பை தங்கள் தனியார் கல்லூரிகளுக்கு ஆதாயம் தேட நினைப்பவர்கள், தங்கள் தொலைக்காட்சிகளில், ஒரு கட்சி மூலமாக ஏற்பாடு செய்பவர்கள் இப்படி குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன், மறுக்கிறேன்.

நீட் தொடர்பாக தமிழக அரசை நான் கேட்ட வெள்ளை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. எத்தனை திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுக பொறுப்பில் உள்ளவர்கள்எத்தனைபேரிடம் தனியார் கல்லூரிகள் உள்ளன, தனியார் கல்லூரிகளில் மாணவர்களிடம் வசூலிக்கும் கல்விக் கட்டணம் எவ்வளவு இதுதொடர்பாக 2020-21 தகவல்களைக் கொடுங்கள் என கேட்கிறேன். பதில் இல்லை. 2006 லிருந்து 2011 வரையிலான திமுக ஆட்சியில்தான் மிக அதிக அளவில் தமிழகத்தில் தனியார் கல்லூரிகள் தொடங்கியதாக பதிவாகியுள்ளன. திமுக கட்சியே ஒரு கார்ப்போரேட் பாணியில்தான் கட்சி நடத்தப்படுகிறது. ஆனால் மோடி அப்படியில்லை. அவர் வந்த பிறகுதான் 2014லிருந்துதான் அரசு கல்லூரிகளுக்கான மருத்துவ இடங்களை இரண்டு மடங்காக பெருக்கியுள்ளோம்.

புதிய கல்விக் கொள்கையில் இந்தித் திணிப்பு இல்லை: இந்தித் திணிப்பதை நீங்கள் மட்டுமல்ல பாஜகவும் எதிர்க்கத்தான் போகிறது. ஒரு மொழியை எங்குமே திணிக்கக் கூடாது என்பதுதான் கட்சியின் நிலைப்பாடு. ஆனால் புதிய கல்விக் கொள்கையில் மாணவர்களின் விருப்பத்திற்கு இடம் அளிக்கிறது. தமிழைக் கண்டிப்பாக படிக்கிறது. ஆங்கிலம் கண்டிப்பாக படிக்க வேண்டும். மூன்றாவது மொழியை மாணவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். இப்படி சொன்னால் உடனே என்ன சொல்வார்கள் பாஜக பின்கதவு வழியாக உள்ளே வருகிறது என்று.

இதுபோல ஆதாரமின்றி சொல்பவர்களுக்கு நாம் என்ன சொல்லமுடியும் மொத்த பதிவு விகிதத்தில் தமிழகம் முதல் இடம் பிடித்தது நெம்பர் ஒன்றாக இந்தியாவில் இருப்பதாக பெருமை பேசுகிறோம். ஆனால் 100 சதவீதத்தை எட்டியுள்ளோமா? ஒரு ஐரோப்பா நாட்டுக்கு இணையாக வந்துவிட்டோமா கிடையாது. புதிய கல்வி கொள்கை அதையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்கிறது. இன்னொரு பக்கம் பள்ளியில் மாணவர்களுக்கு சுமை உள்ளது. புதிய கல்வி கொள்கையில் அவ்வளவு சுமைகளையும் உடைத்து 5 பாடத்திட்டங்களாக 12ஆம் வகுப்பு வரை பிரிக்கிறோம். மூன்றுமூன்று ஆண்டுகள் முடிக்கும்போதுதான் தேர்வு. இடைப்பட்ட ஆண்டுகளில் தேர்வு இல்லை. 5ஆம் வகுப்பு வரை மாணவர்களின் பயிலும் மொழி தாய்மொழியாகத்தான் இருக்கும்.

நமது மாணவர்கள் தமிழில்தான் படிப்பார்கள் . இந்நிலை மொழியை வைத்து அரசியல் செய்யக்கூடிய திமுக தலைவர்கள் நடத்தும் பள்ளியிலேயே தாய் மொழியான தமிழை பயிலும்மொழியாக வைக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் புதிய கல்வி கொள்கையில் அது கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு சிறந்த திட்டத்தை இங்குள்ளவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? ஆண்ட்டி இந்தி, ஆண்ட்டி மனநிலை, தமிழகத்தில் சிலர் எந்த நல்ல திட்டம் வந்தாலும் அதற்கு எதிராகவே நிற்கிறார்க்ள். இந்தியை திணித்தால் நிச்சயம் பாஜகவும் எதிர்க்கும். ஆனால் கல்விக்கொள்கையை குறைசொல்பவர்கள் ஆதாரப்பூர்வமாக மறுக்கவேண்டும்.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x